Monday 12 November 2012

'தீப ஒளி' பரவட்டும்!


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

உண்மையான மகிழ்ச்சி என்பது விழாக்களை நாம் பாதுகாப்பாகக் கொண்டாடுவதில்தான் இருக்கிறது. பாதுகாப்பு என்பது நமக்கு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ளவருக்கும், சுற்றியுள்ளவைகளுக்கும்தான். இதைத்தான் ரஞ்சித் எழுதிய உயிரின்வலி சிறுகதை நமக்குச் சொல்கிறது.

வெடிகளைப் பொருத்தவரை தயாரித்து கடைகளில் கொலு ஏறும்வரை ஒருநிலை. அதை உயிர்மையில் வந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரை காட்டுகிறது. அதை நாம் வாங்கி கொளுத்திய பின்புள்ள அடுத்த நிலையைக் கீற்றில் வந்த கட்டுரை விளக்குகிறது.

இம்மாணவப் பருவத்தில் இவ்விரண்டையும் அறிந்துகொள்வது மட்டுமின்றி, உங்களின் நட்புக்குரியவர்களுக்கும் இதைக் கூறுங்கள். மேலும், தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கூந்தன்குளம், கிட்டாம்பாளையம், வேட்டன்குடி ஆகிய கிராமங்களில் அதிகமான பறவைகள் வசிப்பதால் அங்குள்ளவர்கள் யாரும் வெடி வெடிப்பதில்லை. இதை அங்குள்ள சிறுவர்களே மகிழ்ச்சியாகக் கூறுகிறார்கள்.

தீப ஒளி உங்கள் உள்ளங்களிலிருந்து இல்லங்களில் பரவட்டும்.

Thursday 27 September 2012

ஓவியக் கண்காட்சி


அன்பு மாணவர்களுக்கு,
வணக்கம்.
புளியங்குடி, எஸ்.வீராச்சாமி செட்டியார் கல்வியியல் கல்லூரியில் இன்று
(27- 09 – 2112) ஓவியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்ரு, அதே கல்லூரியின் விளம்பரக் கலை விரிவுரையாளர் கமலக் கண்ணன், குறும்பட இயக்குநர் கணபதி, எஸ்.கொண்டல்ராஜ் மற்றும் தென்காசி வட்ட ஓவிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், புளியங்குடி எம்.முத்துராமலிங்கம், நெல்லை பொன்வள்ளிநாயகம் ஆகியோரும் வந்திருந்தனர்.

கண்காட்சியில் மேலுள்ள ஓவியர்களின் ஓவியங்களும், ம.செ., மாருதி போன்றோரின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. கல்லூரி மாணவர்களின் ஓவியங்களும் ஆங்காங்கே இருந்தன.

தேங்காய் செரட்டையில் கார்விங் வேலைகளுடன் இருந்தது நம்மை வியக்க வைத்தது. மாணவர்கள் செய்திருந்த களிமண் சிலைகளும் அங்கு இருந்தன. விழா மற்றும் கண்காட்சி ஏற்பாடுகளை கல்லூரியோடு சேர்ந்து எஸ்.எஸ்.மணியன் கலைக் கூடம் செய்திருக்கிறது. கண்காட்சி 28, 29 – 09 – 2112 ஆகிய இரு நாட்கள் இருக்கும்.

கலை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம். அவசர உலகில் அதைப் பழகவும் முடியாமல், ரசிக்கவும் முடியாமல், இன்றைய நெருக்கடியில் மூழ்கி மனிதன் பாழாய் போய்க் கொண்டிருக்கிறான். நம் அன்றாடப் பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்வதற்கு கலையை ரசிப்பது மிக அவசியம் என்று அறிஞர் அண்ணா கூடக் கூறுவார்.

நம் அருகில் ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் நண்பர்களோடு சேர்ந்து சென்று தவறாமல் பார்த்து வாருங்கள்.

Friday 3 August 2012

நிறைகளை நினையுங்கள்!


கழுகுமலை ஆர். சி. சர்ச்சின் பங்குத் தந்தையாக விசுவாசம் ஆரோக்கியராஜ் அவர்கள் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன. அவர் மாணவர்களுக்கு மத்தியில் பேசும் போதெல்லாம், கல்வியிலும் உடல் நிலையிலும் பின்தங்கி இருப்போரைப் பற்றி அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்கிறார். காரணம், அவருடைய குழந்தைப் பருவம் மற்றும் மாணவப் பருவம் அத்தகையதாய் இருந்திருக்கிறது.

சிறு வயதில் நீண்ட நாட்களாக அவரால் நடக்க முடியாமல் இருந்தது, கடவுள் நம்பிக்கையால் மன வலிமை பெற்று நடந்தது - இவை அவரது துறவற விருப்பத்திற்கு காரணமாய் இருந்திருக்கின்றன. தன் பள்ளிப் படிப்பை கழுகுமலை ஆர்.சி. சூசை பள்ளியில் முடித்திருக்கிறார். அப்போது அவருக்குப் பேச்சு சரியாக வராமல் இருந்திருக்கிறது. வார்த்தைகளைத் திக்கித்திக்கி பேசுவதால் பிற மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கின்றனர். இதனால், அவருக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் எழுந்திருக்கிறது. படிப்பிலும் மிக சுமாராகவே இருந்திருக்கிறார். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி பயத்தில் இருந்தவர், கடவுள் மேல் நம்பிக்கை வைத்துப் படித்ததால் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார். குருமாணவர் படிப்பின் போதும் பேச்சு அவருக்கு அப்படியேதான் இருந்திருக்கிறது. அவரின் மேற்பார்வை குருவானவர், இவருக்கு பேச்சு சரியாக வராததையும், இவரால் எப்படி போதிக்கும் பணியை சரிவர செய்யமுடியும் என்பதையும் ஏக்கமாக அவரின் மேலாளருக்குக் கடித்தத்தில் எழுதியுள்ளார். இருப்பினும், தன் இறுதி ஆண்டில் கடவுளின் அருளால் பேச்சு சரியானதை நினைத்து மகிழ்ந்துரைக்கிறார்.

பட்டதாரியான அவர் இப்போது எவ்விதத் தடையும் இன்றி திடமான குரலில் அழகாகப் பேசுகிறார். அவரது பேச்சில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஒரு செடி சரியாக வரவில்லை என்று உடனே பிடுங்கி எரிந்து விடாதீர்கள். அதன் மீது கொஞ்சம் அக்கறை கொண்டு கவனித்தால் போதும், அதுவே பின்னாளில் நற்பலன் தரும் மரமாக மாறும். இதை கூறிவிட்டு அதற்குத் தன்னையே சான்றாகக் கூறுகிறார். உங்களுடைய நிறைகளை நினைத்து முன்னேறுங்கள், குறைகளை அல்ல என்பதை  “Count your blessings, not your worries” என்கிறார்.

உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் ஒருவர் சோர்ந்து போய் விடக் கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாக இருக்கிறார். அவரது வாக்கும் போக்கும் ஏதாவது ஒரு வகையில் நமக்குத் தூண்டுதலாக இருந்தால், அதுவே நம் வாழ்க்கைக்கு விளக்கு!

Saturday 28 July 2012

கணிப்பொறியில் அலகிடுதல்!


பெங்களூரிலிருந்து கடந்த முறை கழுகுமலைக்கு ரஞ்சித் வரும் போது, கணிப்பொறித் தமிழ் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, கணிப்பொறி மென்பொருள் வழி தமிழிற்கு ஏதாவது செய்ய வேண்டும். குறிப்பாக, கணக்கு போல இருக்கும் புணர்ச்சி விதியை மென்பொருள் கணக்கீட்டிற்குள் கொண்டு வர முடியுமா? என்றான். முடியும்.என்றேன்.
தொடர்ந்து,புணர்ச்சியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் விதிகளுக்கு உடன்படாதவைகளும் உண்டு. அவற்றிக்குத் தீர்வு புறனடையில் கூறப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், முதலிலேயே பெரிய ஒன்றை எடுத்து, ஏதோ ஒரு சிறு சிக்கல் ஏற்படும் போது, நம் ஆர்வமும் தடைபட்டுவிடக் கூடாது. எனவே, முதல் முயற்சியாக, குறைந்த வரையறைகளே உள்ள திருக்குறளுக்கான அலகிடுதலை செய்து பார்த்தால் என்ன? என்றேன். அதுவும் சரிதான் என்றவன், பள்ளியில் படித்ததை மீண்டும் கேட்டு குறிப்பெடுத்துச் சென்றான்.

இம்முறை வரும் போது, அலகிடுதலுக்கான மென்பொருளை மிக அழகாக, நேர்த்தியாக எழுதி வடிவமைத்துக் கொண்டு வந்தவன், என் வீட்டிலுள்ள கணிப்பொறியில் அதை இன்ஸ்டால் செய்து இயக்கிக் காண்பித்தான். பிரமாதம்! திருக்குறளை டைப் செய்து அலகிடவும் கட்டத்தை கிளிக் செய்தால் போதும். அடுத்த நொடி, குறளிலுள்ள ஏழு சீர்களும் சீர், அசை, வாய்ப்பாடு என்ற முறையே அலகிடப்பட்டு திரையில் தோன்றியது. வியந்து போனேன்.
என்னையும் ஒரு திருக்குறளை டைப் செய்து பார்க்கச் சொன்னான். டைப் செய்து கிளிக் செய்தேன். அலகிடப்பட்ட விடை அழகாக வந்தது. ஒவ்வொரு சீரையும் அசை பிரித்து, அதன் அருகிலேயே அதற்கான குறில், நெடில் குறிப்பும் இடம் பெற்று தெளிவுறத் தோன்றியது. இதற்காக, மூன்று விதமான நிரல் மொழியைப் பயன்படுத்தியதாகக் கூறினான்.
இதைக் காணும் மாணவர்களுக்கு தமிழைக் கற்பதில் ஆர்வம் வருவது மட்டுமின்றி, தமிழை இவ்வாறு புது வடிவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற அவாவும் கண்டிப்பாகப் பிறக்கும். ஏடுகளில் தூங்கும் தமிழை - கணிபொறியில் கொண்டு செல்வதால் தமிழின் வயதும், வாழ்வும் நீளும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இன்றைய இளையோர் இதை செய்வது மிகுந்த வரவேற்புக்குரியது.

ரஞ்சித்தின் இந்த வெற்றி, புணர்ச்சி விதி முயற்சிக்குக் கம்பளம் விரித்து விட்டது!

Wednesday 25 July 2012

ஒரு மாணவனின் வாக்குமூலம்!


பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தபின், என்ன க்ரூப் எடுக்கலாம் என்று ஒரு சின்ன குழப்பம். சரியான ஆளிடம் கேட்டுத் தெளிந்திருக்க வேண்டும்.  உண்மையில் எனக்கு அக்கறை போதாது. பத்தாவதில் நல்ல மார்க் வாங்கிய  எல்லாரும் First க்ரூப் மட்டும் தான் எடுப்பார்கள் என்பதால் நானும் அதையே எடுத்தேன். படிக்கும் போதும் கஷ்டம் எதுவும் இல்லை. + 2 வில்   90 % மார்க் எடுத்தேன். ஆனால், காலேஜில் சேர்ந்த பின்தான் புரிய ஆரம்பித்தது,  நான் படித்த உயிரியல் எனக்குப் பயன்படப் போவதில்லை என்று! .


எனக்கு முதலில் இருந்தே டாக்டர் ஆகும் எண்ணம் கிடையாது. அதனால்தான் என்ட்ரன்ஸ் கூட எழுதவில்லை. +பப்ளிக் உயிரியல் தேர்விற்கு முந்திய நாள் சர்ச்சில் தமிழாசிரியரோடு பேசிக்கொண்டிருந்த போது, நாளைக்கி பரிட்சதானடா? என்றார். பாசாகப் படிச்சிருக்கேன் சார்! என்றேன். வாங்கியதிலேயே  குறைவு அதில்தான்.


காலேஜ் முதல் வருடத்தில், முதல் செமஸ்டரில் சாதாரண MS Office  தான் பாடம். எனக்கு கம்ப்யூட்டரை ஆன் பண்ணக்கூடத் தெரியாது. நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒருமுறை CPU வை ஆன் பண்ணாமல் மானிட்டரை மட்டும் ஆன் பண்ணி, ஒன்னும் இயங்காததால் ஸ்ரீதேவி மேடத்திடம் சிஸ்டம் ரிப்பேராகி விட்டது என்று சொல்லித் திட்டு வாங்கினேன். இன்னொரு முறை திடீரென்று கரன்ட் போய், Shut down  பண்ணச் சொன்னதற்கு, அப்படியே மெயின் சுவிட்சை அணைத்து விட்டேன்.

இன்னொரு முறை , " Press  Any  Key  to  Start Windows " என்று மெசேஜ் வந்த பின்னும் நான் எதையும் செய்யாமல் இருந்ததைக் கண்ட மேடம், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள்.  "Any என்கிற Key, Key board ல் எங்கிருக்கிறது ? என்று கேட்டேன் . "வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவேன், இந்த கிண்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்" என்று மேடம் மிகவும் கோபத்தோடு திட்ட, உண்மையிலேயே  எனக்கு தெரியாது என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லப் படாத பாடு பட்டு விட்டேன்.

முதல் செமஸ்டராவது பரவாயில்லை. இரண்டாவது செமஸ்டரில் C ++ போன்ற பாடங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிலிருந்து ஒரு புதிய விரிவுரையாளர் வந்தார். அவர் சொல்வது வகுப்பில் 95 % பேருக்குப் புரியும். என்னை மாதிரி ரெண்டு மூனு பேர் பரிதாபமாக உட்கார்ந்திருப்போம். எல்லாப் பையன்களும் லேபில் நிறைய மார்க் வாங்கி பெர்சென்டேஜை உயர்த்திக் கொள்வது பற்றிய கனவில் இருக்க, நானெல்லாம் பாசாக வேண்டுமே என்ற பரிதவிப்பில் இருப்பேன்.


நான் மூன்றாம் வருடம் படிக்கும் போது, என் தம்பி +1 முதல் க்ரூப்பில் சேர்ந்தான். மேலே சொன்னதை எல்லாம் எங்கள் வீட்டில் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து அவன் என்னிடம் போனில் பேசும் போது, " அண்ணே கஷ்டமா இருக்கு, நானும் டாக்டர் எல்லாம் ஆகனும்னு நினைக்கலே, தாவரவியலுக்குத் தனியா, விலங்கியலுக்குத் தனியா ஏகப்பட்ட ரெக்கார்ட் எழுத வேண்டி இருக்கு, எவ்வளவு தான் முயற்சி செய்து படம் வரைந்தாலும் நல்லா  வரமாட்டக்கி. முழு மதிப்பெண் வாங்க வழியே இல்ல. க்ரூப் மாறி விடட்டுமா" என்று கேட்டான். எனக்குத் தயக்கமே இல்லை.

எங்கப்பா மட்டும் காலாண்டு பரிட்ச வந்திருச்சே, இனிமேல் எப்படி க்ரூப் மாற்ற முடியும் என்றார், அவருக்கும் First க்ரூப்பில்தான் மகன் படித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படிச்சி எந்த வேலைக்குப் போனாலும், திறமை இருக்கறவன்  முன்னேறிருவான் என்பது அவர் பாலிசி!

பள்ளி தலைமையாசிரியர், க்ரூப் மாற்றி விடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்ல, விருப்பமில்லாத படிப்பை வீம்புக்கு படிக்க வேண்டியதில்ல, உன்னால இனி  பிக்கப் பண்ணிற முடியுமா?" என்று மட்டும் கேட்டார். முடியும் என்றதும் மாற்றியும் விட்டார். என் தம்பி என்னை மாதிரி இன்ஜினியரிங் படிக்கும் போது கஷ்டப்படவில்லை!


என் தம்பிக்கு என்ன சொன்னேனோ , அதையே இப்போது பத்தாவது முடித்து +சேரவிருக்கும்/சேர்ந்திருக்கும் தம்பி/தங்கைகளுக்கும் கூறுகிறேன். ஒரு கனவை சிதைக்கும் உரிமை எனக்கு இல்லை, நீங்கள் டாக்டராகத்தான் ஆவேன் என்ற கனவில், கடும் முயற்சியோடு படித்தால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் கனவு நிறைவேற, ஒரு நல்ல மருத்துவர் சமூகத்திற்கு கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன் .


டாக்டர் மட்டுமல்ல
, வேளாண் அறிவியல், பயோ டெக்னாலஜி போன்ற உயிரியல் பிரிவுகளும் உள்ளன. அவையும் முக்கியமானவையே! அந்தப் படிப்பாலும் நீங்கள் சமூகப் பணியாற்றவோ, நன்றாக சம்பாதிக்கவோ முடியும்தான். ஆனால்,  வையல்லாத வேறு பிரிவை நீங்கள் காலேஜில் தேர்ந்தெடுத்தால், சிரமப் படப்போவதும் நீங்கள் தான்!


சும்மா, First  க்ரூப் எடுத்தாதான் மதிப்பு என்பதற்காகவோ, அப்பா சொல்றார் , அம்மா சொல்றார் என்பதற்காகவோ உங்களுக்குக் கஷ்டமாக இருப்பதைச்  செய்யவேண்டாம். கம்ப்யூட்டர் சயின்சும் ஈசியான பாடமல்ல, கஷ்டப்பட்டுத்தான்  அதையும் படிக்க வேண்டும். ஆனால், நீங்கள் பொறியியலோ, வேறு அறிவியல் பிரிவோ எடுத்துப் படிக்கும் போது கஷ்டப்பட வேண்டி இருக்காது.


எனக்கு ஒரு மேதாவி அறிவுரை சொன்னார், "நீ கம்ப்யூட்டரை எப்ப வேணும்னாலும் பிரைவேட்டா படிச்சுக்கலாம், ஆனா பயாலஜியை ஸ்கூலில் படித்தால்தான் உண்டு"  என்று. மேம்போக்காகப் பார்த்தால் கிளர்ச்சி கொடுக்கும் இந்த வாக்கியம், பிராக்டிக்கலாக உதவாது.


இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் இந்த நான்கு பிரிவிற்கும் ரெக்கார்டு நோட் எழுதி, படம் வரைந்து, பாடங்களையும் படித்து, இவை போக  இரண்டு பாகங்களாக கணிதம், ஆங்கிலம், தமிழ் தலா இரண்டு பேப்பர்கள் இவற்றையும் படித்து விட்டு, நீங்கள் ஓய்வு நேரத்தில் ஆயிரக் கணக்கில் பணம் கட்டி கம்ப்யூட்டரும் படிப்பீர்களாக்கும்? போங்கடே...போங்க!  


அதனால, உங்க வாழ்க்கை இப்ப உண்மையிலேயே உங்க கையில் தான். ஒன்னுக்கு பத்து தடவ யோசிச்சு முடிவு பண்ணிக் கோங்க!

Friday 29 June 2012

காந்தி சொன்ன பாவங்கள்!


ஒவ்வொரு சமயமும் பாவங்கள் எவை எவை என்று வரையறுத்துச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நம் மகாத்மா காந்தி அவர்கள் வரிசைப்படுத்தும் ஏழு பாவங்களைப் பாருங்கள்.
1.கொள்கை இல்லா அரசியல்
2.உழைப்பு இல்லா செல்வம்
3.நன்னெறி இல்லாத வியாபாரம்
4.குணமற்ற கல்வி
5.மனிதத் தன்மையற்ற விஞ்ஞானம்
6.மனசாட்சியற்ற இன்பம்
7.தியாகமில்லாத வழிபாடு

Thursday 7 June 2012

கலாம் பேச்சு!


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும், என்.எல்.சி., நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சமீபத்தில் பார்வையிட்டார். அங்குள்ள  இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கலாம் அவர்கள் பேசியதிலிருந்து சில வரிகள் :

என்.எல்.சி., நிறுவனத்தை முதன் முறையாகப் பார்வையிடுகிறேன். நம் நாட்டின் பலமாகத்  திகழும், மிகவும் சக்தி வாய்ந்த என்.எல்.சி., நிறுவனத்தில், தற்போது, 2,740 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.

நெய்வேலியில், 18 லட்சம் மரங்கள் இருப்பது, ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. சுத்தமான, பசுமையான நகரம், நெய்வேலி. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது. உலகில், மூன்று முறை பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

உலகில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டது. எப்போதும் பிரச்னைகள் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. பிரச்னைகளுக்கு நாம் தலைமை தாங்கி, அதை விரட்ட வேண்டும். 

நம் நாடு, 2020ம் ஆண்டில் வல்லரசாகும். நதிகள் இணைக்கப்படும் போது, மாநிலங்களுக்குள் பிரச்னைகள் வராது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் இளைஞர்கள் தான், நம் நாட்டின் மிகப் பெரிய பலமாகத் திகழ்கின்றனர்.

வீடுகள் தோறும், சிறு நூலகம் இருக்க வேண்டும். "டிவி' பார்ப்பதை தவிர்த்து, நல்ல புத்தகங்களை படிக்கும் போது, அறிவு வளர்ச்சி மேலோங்கும். குறைந்தபட்சம் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்காவது, பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது புத்தகங்களைப் படித்த, கதிரேசன் என்ற எனது கார் ஓட்டுனர், பேராசிரியாராகி விட்டார். எனவே நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். தோல்விகளைத்தோல்வியடைய செய்ய வேண்டும். தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு. 

ஊழலை ஒழித்தால் நம் நாடு வல்லரசாகும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிள்ளைகள் தங்களது அப்பா அல்லது அம்மா லஞ்சம் வாங்கினால், அவர்களை கடுமையாக திட்டி கண்டிக்க வேண்டும். பெற்ற பிள்ளைகள் கண்டிப்பதை விட, அந்த பெற்றோருக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் பட்சத்தில், நம் நாட்டில் மிக விரைவில் லஞ்ச, ஊழல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

இவ்வாறுமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.


Saturday 2 June 2012

நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் இலவசம்!


வணக்கம் ஐயா வாசகர்களே,
உங்களுக்கு ஓர் இணையதள அறிமுகம்.

தமிழ் விர்சுவல் யுனிவர்சிட்டி என்றொரு இணையதளம் உள்ளது. இதில் வலப்புறம் நூலகம் என்ற தொடர்பில் உள்ளே சென்றால் நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம் . 

கி.வா.ஜ  அவர்களை க்ளிக் செய்து " கவி பாடலாம் " என்ற நூலை தரவிறக்கிப் படித்தேன். மிகமிக அருமை. எதுகை மோனை உங்களுக்கு சுவாரசியம் தராமல் கூடப்போகலாம். பாவினங்களை அவர் விளக்கும் விதம் அட்டகாசமாக இருந்தது.
நீங்களும் விரும்பிய நூலைத் தரவிறக்கிப் படித்துப் பயன் பெறுங்கள்.

நன்றி. 
அன்புடன்,
மா.சட்டநாதன்
http://tamilvu.org/

நன்றி: சட்டநாதன் மெயில் 

Tuesday 29 May 2012

புத்தகத் திருவிழா!


              கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தினுள் உள்ள காந்தி மண்டபத்தில் 28 வது தேசிய புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இது ஜூன் 8 ஆம் தேதி வரை இருக்கும்.
             திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இதை அமைத்துள்ளது.அன்னம்,ஆழி,உயிர்மை,காலச்சுவடு,கிழக்கு,கொற்றவை,சந்தியா,பாவை,பாரதி,புதுமைப்பித்தன்,கண்ணதாசன்,தாமரை,விஜயா,பிளாக் ஹோல் போன்ற பதிப்பகங்கள்  மற்றும் விகடன் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம்,... என்று நீங்கள் எதிர் பார்க்கும் எல்லாப் பிரிவுகளும் இருக்கின்றன. கல்கியும் காரல்மார்க்சும் கிடைக்கிறார்கள். தற்கால எழுத்தாளர்களின் புத்தகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும் அதிகமாக உள்ளன.
            சி.ஜெயபாரதன் எழுதிய அணுசக்தி, நடன.காசிநாதன் எழுதிய தமிழர் காசு இயல், மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதிய தமிழர் வளர்த்த அழகு கலைகள், கி.ரா. எழுதிய தாத்தா சொன்ன கதைகள், பேல பெலாஸ் எழுதிய சினிமாக் கோட்பாடு, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய காற்றில் யாரோ நடக்கிறார்கள், உலக சினிமா, தியோடர் பாஸ்கரன் எழுதிய நம்மைச் சுற்றி காட்டுயிர், ஜெயமோகன் எழுதிய சிலுவையின் பெயரால், சுஜாதா எழுதிய திருக்குறள் புதிய உரை போன்ற பல நூல்களை நான் வாங்கினேன். 10% முதல் 30% வரை தள்ளுபடி தருகிறார்கள்.
             எத்தனையோ முறை கோவில்பட்டி போறோம் வாரோம். அப்படி என்னதான் இருக்குன்னு ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் வாங்களேன்.

Thursday 26 April 2012

வீட்டுக்கு வெளியே வாங்க!

           ம் பள்ளியில் 12 -ம் வகுப்பு(2010 -2011 இல்) படித்து விட்டு தூத்துக்குடியில் பி.எஸ்சி படித்து வரும் அருள் ஜேசுராஜ், தூத்துக்குடியில் உள்ள ஒரு இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறான். படிக்கும் போதே பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமுடைய அவன், இருபதுக்கும் மேற்பட்ட இருபால் இளையோரும் உள்ள இவ்வியக்கத்தின் பணிகளாக நம்மிடம் கூறியன:
             எங்களுடைய படிப்பு நேரம் போக விடுமுறைநாட்களில் எங்கள் பணிகளைச் செய்கிறோம். சமூக விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளை (கரகம்,களியல்,சிலா,பறை,ஒயில்,ஒத்தக்கம்பு போன்ற நடனங்கள் மூலமும்,பட்டிமன்றம்  மூலமும்)பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகிறோம்.  எங்களின் கலைநிகழ்ச்சிகளை அருகிலுள்ள கோவில் திருவிழாக்களுக்கு விரும்பி அழைக்கிறார்கள். 
                        அண்மையில், நியுக்ளியர் அணுவால் ஏற்படும் தீமைகளைக் குறித்து வீதி நாடகங்கள் நடத்தி இருக்கிறோம் .கூடங்குளம் சென்று அங்கு போராடும் மக்களையும், உதயகுமாரையும் சந்தித்து வந்திருக்கிறோம். 
                       தெருவோரக் குழந்தைகள், பிச்சைஎடுக்கும் குழந்தைகள் போன்றோரைக் கண்டுபிடித்து தூத்துக்குடி ஆயரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பல்நோக்கு சமூகசேவை சங்கத்திற்கு தெரியப்படுத்துகிறோம். அரசு உதவி பெரும் அச்சங்கம் அக்குழந்தைகளுக்குத் தேவையான உதவி செய்கிறது. இதே போல கொலை,கொள்ளையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அவ்வீட்டிலுள்ள குழந்தைகளையும் இச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
              ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகலில் வீடுகள் சந்தித்து செபித்தல், மாதமிருமுறை அரசு மருத்துவமனையில் ஆதரவற்று இருக்கும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல். தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லம், மாற்றுத் திறனாளிகள் இல்லம், குழந்தைக் குற்றவாளிகள் போன்றோரைச் சந்தித்து நம்பிக்கையூட்டுதல் போன்ற பணிகளையும் செய்கிறோம்
                                      இப்பணிகளுக்கு மத்தியிலும்  தன் படிப்பில் முதலாம் ஆண்டில்
86 % சதவீத மதிப்பெண் வைத்துள்ளான் அருள். 
              இன்றைய இளைஞர்களில் அதிகம் பேர் விடுமுறை நாட்களில், பத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் உள்ள பேன்ட் அணிகிறார்கள். அதில் காரணம் தெரியாது பல கயிறுகள் தொங்க, எண்ணெய் தேய்க்காத காஞ்சிபோன அவர்களின் தலைக்குப் பின், தொங்கும் குல்லாஉடனான 
டி-சர்ட் அணிந்து கொண்டு, கழுத்தில் கையில் கண்டபடி ஸ்டீல் செயின், டாலர் சகிதமாக நண்பர்களுடன் ஊர்சுற்றுவதுபார்ட்டி என்ற பேரில் மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, அரட்டையடிப்பது; இன்னும் சிலர், உண்பது, உறங்குவது, டிவி பார்ப்பது என்ற கொள்கைப்பிடிப்போடு இருப்பவர்களும் உண்டு. யாரோடும் ஒட்டாத பயங்கரப் படிப்பாளிகள். சிலர் டியூசன் போவதாகக் கூறி  இல்லாத வம்பை வீட்டுக்கு இழுத்து வருவார்கள். பேஸ் புக்கில் புதைந்து கிடப்பது. வேறு சிலரோ, அகப்பட்ட பெண்களையெல்லாம் தோழி என்ற பெயரில், காதோடு ஒட்டவைத்த "செல்"லும் கையுமாகத் திரிவார்கள். இதுதான் இன்றைய இளையோரைப் பாழ்படுத்தும் வாடிக்கைகள்!
            இவர்களுக்கு  மத்தியில் அருள் மற்றும் குழுவினரின் செயல்பாடு நமக்கு மகிழ்ச்சி  தருவதாக உள்ளது. இவ்வாறு ஒரு புதிய இளைய தலைமுறையை உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ள அருட்தந்தை கிராசிஸ் மைக்கேல் அவர்கள்இளைஞர் பணியகத்தின் இயக்குனராகப் பொறுப்பு வகிப்பது மட்டுமின்றி, உண்மையிலேயே பணியாற்றி வருவது சிறப்பு!
             ளைஞர் இயக்கம் நடத்துபவர்களுக்கு, இவர்களைத் தெரிந்த பின்பாவது புத்தி வரட்டும்!