Saturday 28 July 2012

கணிப்பொறியில் அலகிடுதல்!


பெங்களூரிலிருந்து கடந்த முறை கழுகுமலைக்கு ரஞ்சித் வரும் போது, கணிப்பொறித் தமிழ் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, கணிப்பொறி மென்பொருள் வழி தமிழிற்கு ஏதாவது செய்ய வேண்டும். குறிப்பாக, கணக்கு போல இருக்கும் புணர்ச்சி விதியை மென்பொருள் கணக்கீட்டிற்குள் கொண்டு வர முடியுமா? என்றான். முடியும்.என்றேன்.
தொடர்ந்து,புணர்ச்சியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் விதிகளுக்கு உடன்படாதவைகளும் உண்டு. அவற்றிக்குத் தீர்வு புறனடையில் கூறப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், முதலிலேயே பெரிய ஒன்றை எடுத்து, ஏதோ ஒரு சிறு சிக்கல் ஏற்படும் போது, நம் ஆர்வமும் தடைபட்டுவிடக் கூடாது. எனவே, முதல் முயற்சியாக, குறைந்த வரையறைகளே உள்ள திருக்குறளுக்கான அலகிடுதலை செய்து பார்த்தால் என்ன? என்றேன். அதுவும் சரிதான் என்றவன், பள்ளியில் படித்ததை மீண்டும் கேட்டு குறிப்பெடுத்துச் சென்றான்.

இம்முறை வரும் போது, அலகிடுதலுக்கான மென்பொருளை மிக அழகாக, நேர்த்தியாக எழுதி வடிவமைத்துக் கொண்டு வந்தவன், என் வீட்டிலுள்ள கணிப்பொறியில் அதை இன்ஸ்டால் செய்து இயக்கிக் காண்பித்தான். பிரமாதம்! திருக்குறளை டைப் செய்து அலகிடவும் கட்டத்தை கிளிக் செய்தால் போதும். அடுத்த நொடி, குறளிலுள்ள ஏழு சீர்களும் சீர், அசை, வாய்ப்பாடு என்ற முறையே அலகிடப்பட்டு திரையில் தோன்றியது. வியந்து போனேன்.
என்னையும் ஒரு திருக்குறளை டைப் செய்து பார்க்கச் சொன்னான். டைப் செய்து கிளிக் செய்தேன். அலகிடப்பட்ட விடை அழகாக வந்தது. ஒவ்வொரு சீரையும் அசை பிரித்து, அதன் அருகிலேயே அதற்கான குறில், நெடில் குறிப்பும் இடம் பெற்று தெளிவுறத் தோன்றியது. இதற்காக, மூன்று விதமான நிரல் மொழியைப் பயன்படுத்தியதாகக் கூறினான்.
இதைக் காணும் மாணவர்களுக்கு தமிழைக் கற்பதில் ஆர்வம் வருவது மட்டுமின்றி, தமிழை இவ்வாறு புது வடிவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற அவாவும் கண்டிப்பாகப் பிறக்கும். ஏடுகளில் தூங்கும் தமிழை - கணிபொறியில் கொண்டு செல்வதால் தமிழின் வயதும், வாழ்வும் நீளும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இன்றைய இளையோர் இதை செய்வது மிகுந்த வரவேற்புக்குரியது.

ரஞ்சித்தின் இந்த வெற்றி, புணர்ச்சி விதி முயற்சிக்குக் கம்பளம் விரித்து விட்டது!

Wednesday 25 July 2012

ஒரு மாணவனின் வாக்குமூலம்!


பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தபின், என்ன க்ரூப் எடுக்கலாம் என்று ஒரு சின்ன குழப்பம். சரியான ஆளிடம் கேட்டுத் தெளிந்திருக்க வேண்டும்.  உண்மையில் எனக்கு அக்கறை போதாது. பத்தாவதில் நல்ல மார்க் வாங்கிய  எல்லாரும் First க்ரூப் மட்டும் தான் எடுப்பார்கள் என்பதால் நானும் அதையே எடுத்தேன். படிக்கும் போதும் கஷ்டம் எதுவும் இல்லை. + 2 வில்   90 % மார்க் எடுத்தேன். ஆனால், காலேஜில் சேர்ந்த பின்தான் புரிய ஆரம்பித்தது,  நான் படித்த உயிரியல் எனக்குப் பயன்படப் போவதில்லை என்று! .


எனக்கு முதலில் இருந்தே டாக்டர் ஆகும் எண்ணம் கிடையாது. அதனால்தான் என்ட்ரன்ஸ் கூட எழுதவில்லை. +பப்ளிக் உயிரியல் தேர்விற்கு முந்திய நாள் சர்ச்சில் தமிழாசிரியரோடு பேசிக்கொண்டிருந்த போது, நாளைக்கி பரிட்சதானடா? என்றார். பாசாகப் படிச்சிருக்கேன் சார்! என்றேன். வாங்கியதிலேயே  குறைவு அதில்தான்.


காலேஜ் முதல் வருடத்தில், முதல் செமஸ்டரில் சாதாரண MS Office  தான் பாடம். எனக்கு கம்ப்யூட்டரை ஆன் பண்ணக்கூடத் தெரியாது. நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒருமுறை CPU வை ஆன் பண்ணாமல் மானிட்டரை மட்டும் ஆன் பண்ணி, ஒன்னும் இயங்காததால் ஸ்ரீதேவி மேடத்திடம் சிஸ்டம் ரிப்பேராகி விட்டது என்று சொல்லித் திட்டு வாங்கினேன். இன்னொரு முறை திடீரென்று கரன்ட் போய், Shut down  பண்ணச் சொன்னதற்கு, அப்படியே மெயின் சுவிட்சை அணைத்து விட்டேன்.

இன்னொரு முறை , " Press  Any  Key  to  Start Windows " என்று மெசேஜ் வந்த பின்னும் நான் எதையும் செய்யாமல் இருந்ததைக் கண்ட மேடம், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள்.  "Any என்கிற Key, Key board ல் எங்கிருக்கிறது ? என்று கேட்டேன் . "வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவேன், இந்த கிண்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்" என்று மேடம் மிகவும் கோபத்தோடு திட்ட, உண்மையிலேயே  எனக்கு தெரியாது என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லப் படாத பாடு பட்டு விட்டேன்.

முதல் செமஸ்டராவது பரவாயில்லை. இரண்டாவது செமஸ்டரில் C ++ போன்ற பாடங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிலிருந்து ஒரு புதிய விரிவுரையாளர் வந்தார். அவர் சொல்வது வகுப்பில் 95 % பேருக்குப் புரியும். என்னை மாதிரி ரெண்டு மூனு பேர் பரிதாபமாக உட்கார்ந்திருப்போம். எல்லாப் பையன்களும் லேபில் நிறைய மார்க் வாங்கி பெர்சென்டேஜை உயர்த்திக் கொள்வது பற்றிய கனவில் இருக்க, நானெல்லாம் பாசாக வேண்டுமே என்ற பரிதவிப்பில் இருப்பேன்.


நான் மூன்றாம் வருடம் படிக்கும் போது, என் தம்பி +1 முதல் க்ரூப்பில் சேர்ந்தான். மேலே சொன்னதை எல்லாம் எங்கள் வீட்டில் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து அவன் என்னிடம் போனில் பேசும் போது, " அண்ணே கஷ்டமா இருக்கு, நானும் டாக்டர் எல்லாம் ஆகனும்னு நினைக்கலே, தாவரவியலுக்குத் தனியா, விலங்கியலுக்குத் தனியா ஏகப்பட்ட ரெக்கார்ட் எழுத வேண்டி இருக்கு, எவ்வளவு தான் முயற்சி செய்து படம் வரைந்தாலும் நல்லா  வரமாட்டக்கி. முழு மதிப்பெண் வாங்க வழியே இல்ல. க்ரூப் மாறி விடட்டுமா" என்று கேட்டான். எனக்குத் தயக்கமே இல்லை.

எங்கப்பா மட்டும் காலாண்டு பரிட்ச வந்திருச்சே, இனிமேல் எப்படி க்ரூப் மாற்ற முடியும் என்றார், அவருக்கும் First க்ரூப்பில்தான் மகன் படித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படிச்சி எந்த வேலைக்குப் போனாலும், திறமை இருக்கறவன்  முன்னேறிருவான் என்பது அவர் பாலிசி!

பள்ளி தலைமையாசிரியர், க்ரூப் மாற்றி விடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்ல, விருப்பமில்லாத படிப்பை வீம்புக்கு படிக்க வேண்டியதில்ல, உன்னால இனி  பிக்கப் பண்ணிற முடியுமா?" என்று மட்டும் கேட்டார். முடியும் என்றதும் மாற்றியும் விட்டார். என் தம்பி என்னை மாதிரி இன்ஜினியரிங் படிக்கும் போது கஷ்டப்படவில்லை!


என் தம்பிக்கு என்ன சொன்னேனோ , அதையே இப்போது பத்தாவது முடித்து +சேரவிருக்கும்/சேர்ந்திருக்கும் தம்பி/தங்கைகளுக்கும் கூறுகிறேன். ஒரு கனவை சிதைக்கும் உரிமை எனக்கு இல்லை, நீங்கள் டாக்டராகத்தான் ஆவேன் என்ற கனவில், கடும் முயற்சியோடு படித்தால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் கனவு நிறைவேற, ஒரு நல்ல மருத்துவர் சமூகத்திற்கு கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன் .


டாக்டர் மட்டுமல்ல
, வேளாண் அறிவியல், பயோ டெக்னாலஜி போன்ற உயிரியல் பிரிவுகளும் உள்ளன. அவையும் முக்கியமானவையே! அந்தப் படிப்பாலும் நீங்கள் சமூகப் பணியாற்றவோ, நன்றாக சம்பாதிக்கவோ முடியும்தான். ஆனால்,  வையல்லாத வேறு பிரிவை நீங்கள் காலேஜில் தேர்ந்தெடுத்தால், சிரமப் படப்போவதும் நீங்கள் தான்!


சும்மா, First  க்ரூப் எடுத்தாதான் மதிப்பு என்பதற்காகவோ, அப்பா சொல்றார் , அம்மா சொல்றார் என்பதற்காகவோ உங்களுக்குக் கஷ்டமாக இருப்பதைச்  செய்யவேண்டாம். கம்ப்யூட்டர் சயின்சும் ஈசியான பாடமல்ல, கஷ்டப்பட்டுத்தான்  அதையும் படிக்க வேண்டும். ஆனால், நீங்கள் பொறியியலோ, வேறு அறிவியல் பிரிவோ எடுத்துப் படிக்கும் போது கஷ்டப்பட வேண்டி இருக்காது.


எனக்கு ஒரு மேதாவி அறிவுரை சொன்னார், "நீ கம்ப்யூட்டரை எப்ப வேணும்னாலும் பிரைவேட்டா படிச்சுக்கலாம், ஆனா பயாலஜியை ஸ்கூலில் படித்தால்தான் உண்டு"  என்று. மேம்போக்காகப் பார்த்தால் கிளர்ச்சி கொடுக்கும் இந்த வாக்கியம், பிராக்டிக்கலாக உதவாது.


இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் இந்த நான்கு பிரிவிற்கும் ரெக்கார்டு நோட் எழுதி, படம் வரைந்து, பாடங்களையும் படித்து, இவை போக  இரண்டு பாகங்களாக கணிதம், ஆங்கிலம், தமிழ் தலா இரண்டு பேப்பர்கள் இவற்றையும் படித்து விட்டு, நீங்கள் ஓய்வு நேரத்தில் ஆயிரக் கணக்கில் பணம் கட்டி கம்ப்யூட்டரும் படிப்பீர்களாக்கும்? போங்கடே...போங்க!  


அதனால, உங்க வாழ்க்கை இப்ப உண்மையிலேயே உங்க கையில் தான். ஒன்னுக்கு பத்து தடவ யோசிச்சு முடிவு பண்ணிக் கோங்க!