Friday 29 June 2012

காந்தி சொன்ன பாவங்கள்!


ஒவ்வொரு சமயமும் பாவங்கள் எவை எவை என்று வரையறுத்துச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நம் மகாத்மா காந்தி அவர்கள் வரிசைப்படுத்தும் ஏழு பாவங்களைப் பாருங்கள்.
1.கொள்கை இல்லா அரசியல்
2.உழைப்பு இல்லா செல்வம்
3.நன்னெறி இல்லாத வியாபாரம்
4.குணமற்ற கல்வி
5.மனிதத் தன்மையற்ற விஞ்ஞானம்
6.மனசாட்சியற்ற இன்பம்
7.தியாகமில்லாத வழிபாடு

Thursday 7 June 2012

கலாம் பேச்சு!


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும், என்.எல்.சி., நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சமீபத்தில் பார்வையிட்டார். அங்குள்ள  இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கலாம் அவர்கள் பேசியதிலிருந்து சில வரிகள் :

என்.எல்.சி., நிறுவனத்தை முதன் முறையாகப் பார்வையிடுகிறேன். நம் நாட்டின் பலமாகத்  திகழும், மிகவும் சக்தி வாய்ந்த என்.எல்.சி., நிறுவனத்தில், தற்போது, 2,740 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.

நெய்வேலியில், 18 லட்சம் மரங்கள் இருப்பது, ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. சுத்தமான, பசுமையான நகரம், நெய்வேலி. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது. உலகில், மூன்று முறை பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

உலகில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டது. எப்போதும் பிரச்னைகள் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. பிரச்னைகளுக்கு நாம் தலைமை தாங்கி, அதை விரட்ட வேண்டும். 

நம் நாடு, 2020ம் ஆண்டில் வல்லரசாகும். நதிகள் இணைக்கப்படும் போது, மாநிலங்களுக்குள் பிரச்னைகள் வராது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் இளைஞர்கள் தான், நம் நாட்டின் மிகப் பெரிய பலமாகத் திகழ்கின்றனர்.

வீடுகள் தோறும், சிறு நூலகம் இருக்க வேண்டும். "டிவி' பார்ப்பதை தவிர்த்து, நல்ல புத்தகங்களை படிக்கும் போது, அறிவு வளர்ச்சி மேலோங்கும். குறைந்தபட்சம் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்காவது, பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது புத்தகங்களைப் படித்த, கதிரேசன் என்ற எனது கார் ஓட்டுனர், பேராசிரியாராகி விட்டார். எனவே நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். தோல்விகளைத்தோல்வியடைய செய்ய வேண்டும். தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு. 

ஊழலை ஒழித்தால் நம் நாடு வல்லரசாகும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிள்ளைகள் தங்களது அப்பா அல்லது அம்மா லஞ்சம் வாங்கினால், அவர்களை கடுமையாக திட்டி கண்டிக்க வேண்டும். பெற்ற பிள்ளைகள் கண்டிப்பதை விட, அந்த பெற்றோருக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் பட்சத்தில், நம் நாட்டில் மிக விரைவில் லஞ்ச, ஊழல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

இவ்வாறுமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.


Saturday 2 June 2012

நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் இலவசம்!


வணக்கம் ஐயா வாசகர்களே,
உங்களுக்கு ஓர் இணையதள அறிமுகம்.

தமிழ் விர்சுவல் யுனிவர்சிட்டி என்றொரு இணையதளம் உள்ளது. இதில் வலப்புறம் நூலகம் என்ற தொடர்பில் உள்ளே சென்றால் நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம் . 

கி.வா.ஜ  அவர்களை க்ளிக் செய்து " கவி பாடலாம் " என்ற நூலை தரவிறக்கிப் படித்தேன். மிகமிக அருமை. எதுகை மோனை உங்களுக்கு சுவாரசியம் தராமல் கூடப்போகலாம். பாவினங்களை அவர் விளக்கும் விதம் அட்டகாசமாக இருந்தது.
நீங்களும் விரும்பிய நூலைத் தரவிறக்கிப் படித்துப் பயன் பெறுங்கள்.

நன்றி. 
அன்புடன்,
மா.சட்டநாதன்
http://tamilvu.org/

நன்றி: சட்டநாதன் மெயில்