Saturday 3 March 2012

தேர்வுக்கு முன் தண்ணீர் குடிங்க!


ன்றாகப் படிக்க வேண்டும், படித்தவை நினைவில் இருக்க வேண்டும், நினைவில் இருப்பதைஎழுத பேனா வேண்டும், பேப்பர் வேண்டும்.. என்றெல்லாம் யோசிக்கிறீர்களா ? கொஞ்சம் தண்ணீர்குடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயமாய் இருக்கிறதே என நினைக்கிறீர்களா ?
வியப்பூட்டும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் தற்போது சிறந்த ஒரு ஆராய்ச்சியாய் கொண்டாடப்படுகிறது.
தேர்வுக்குச் செல்வதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன் 250 மிலி தண்ணீரை அருந்துவது தேர்வை சிறப்பாக எழுத உதவுகிறது எனும் இந்த ஆராய்ச்சி முடிவு இலண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
 இந்தப் பலனுக்கான சரியான காரணம் இன்னும் புரியாத நிலையில், தண்ணீர் அருந்துவது நிச்சயமாக நன்றாகவும், கவனமாகவும், எளிதாகவும் தேர்வு எழுத உதவுகிறது என்பது மட்டும் இந்த விரிவான ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.
 மூளையில் தகவல் பரிமாற்றம் தண்ணீர் குடித்தபின் எளிதாக இருக்கும் என்பது இதன் காரணமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த சோதனை பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டது. உதாரணமாக தண்ணீர் குடித்த மற்றும் குடிக்காத மாணவர்கள் எப்படி தேர்வில் கவனமாய் செயல்படுகின்றனர், அவர்களுடைய கண்பார்வை கூர்மையில், சிந்தனையில், செயல்படுதலில் ஏதேனும் வேறுபாடு தெரிகிறதா என்றெல்லாம் பல்வேறு வகைகளில் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டது.
இருபடங்களுக்கிடையேயான வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று போட்டி வைத்த போது தண்ணீர் குடித்திருந்த மாணவர்கள் மற்றவர்களை விட 34 விழுக்காடு அதிக சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர்.
 இரண்டும் இரண்டும் எத்தனை என்பது போன்ற எளிய கணக்குப் போட்டிகளில் ஏதும் குறிப்பிடத் தகுந்த வேறுபாடு காணப்படவில்லை, ஆனால் கடினமான நினைவுப் போட்டிகளில் தண்ணீர் குடித்த மாணவர்களே 23 விழுக்காடு அதிகம் சிறப்புடன் செயல்பட்டிருக்கின்றனர்.
தண்ணீர் குடிப்பது பல்வேறு விதங்களில் பயனளிக்கிறது என்பதை இந்த ஆராய்ச்சி இன்னுமொருமுறை தெளிவு படுத்தியிருக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் கெரோலில் எட்மண்ட்ஸ்.
 தண்ணீர் அருந்துவது பெரியவர்களுடைய அறிவுத் திறமையை அதிகரிக்கும் என முன்பு ஒரு ஆராய்ச்சி வெளிவந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
 எனினும், தேர்வுக்கும் தண்ணீர் அருந்துவதற்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியிருக்கும் முதல் ஆராய்ச்சி இது எனும் வகையில் இந்த ஆராய்ச்சி சிறப்பிடம் பெறுகிறது.
நன்றி : சாளரம்