Friday 3 August 2012

நிறைகளை நினையுங்கள்!


கழுகுமலை ஆர். சி. சர்ச்சின் பங்குத் தந்தையாக விசுவாசம் ஆரோக்கியராஜ் அவர்கள் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன. அவர் மாணவர்களுக்கு மத்தியில் பேசும் போதெல்லாம், கல்வியிலும் உடல் நிலையிலும் பின்தங்கி இருப்போரைப் பற்றி அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்கிறார். காரணம், அவருடைய குழந்தைப் பருவம் மற்றும் மாணவப் பருவம் அத்தகையதாய் இருந்திருக்கிறது.

சிறு வயதில் நீண்ட நாட்களாக அவரால் நடக்க முடியாமல் இருந்தது, கடவுள் நம்பிக்கையால் மன வலிமை பெற்று நடந்தது - இவை அவரது துறவற விருப்பத்திற்கு காரணமாய் இருந்திருக்கின்றன. தன் பள்ளிப் படிப்பை கழுகுமலை ஆர்.சி. சூசை பள்ளியில் முடித்திருக்கிறார். அப்போது அவருக்குப் பேச்சு சரியாக வராமல் இருந்திருக்கிறது. வார்த்தைகளைத் திக்கித்திக்கி பேசுவதால் பிற மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கின்றனர். இதனால், அவருக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் எழுந்திருக்கிறது. படிப்பிலும் மிக சுமாராகவே இருந்திருக்கிறார். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி பயத்தில் இருந்தவர், கடவுள் மேல் நம்பிக்கை வைத்துப் படித்ததால் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார். குருமாணவர் படிப்பின் போதும் பேச்சு அவருக்கு அப்படியேதான் இருந்திருக்கிறது. அவரின் மேற்பார்வை குருவானவர், இவருக்கு பேச்சு சரியாக வராததையும், இவரால் எப்படி போதிக்கும் பணியை சரிவர செய்யமுடியும் என்பதையும் ஏக்கமாக அவரின் மேலாளருக்குக் கடித்தத்தில் எழுதியுள்ளார். இருப்பினும், தன் இறுதி ஆண்டில் கடவுளின் அருளால் பேச்சு சரியானதை நினைத்து மகிழ்ந்துரைக்கிறார்.

பட்டதாரியான அவர் இப்போது எவ்விதத் தடையும் இன்றி திடமான குரலில் அழகாகப் பேசுகிறார். அவரது பேச்சில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஒரு செடி சரியாக வரவில்லை என்று உடனே பிடுங்கி எரிந்து விடாதீர்கள். அதன் மீது கொஞ்சம் அக்கறை கொண்டு கவனித்தால் போதும், அதுவே பின்னாளில் நற்பலன் தரும் மரமாக மாறும். இதை கூறிவிட்டு அதற்குத் தன்னையே சான்றாகக் கூறுகிறார். உங்களுடைய நிறைகளை நினைத்து முன்னேறுங்கள், குறைகளை அல்ல என்பதை  “Count your blessings, not your worries” என்கிறார்.

உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் ஒருவர் சோர்ந்து போய் விடக் கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாக இருக்கிறார். அவரது வாக்கும் போக்கும் ஏதாவது ஒரு வகையில் நமக்குத் தூண்டுதலாக இருந்தால், அதுவே நம் வாழ்க்கைக்கு விளக்கு!