Friday, 3 May 2013

முன் மாதிரி விஷயம்!


“இரத்தத்தில் திருமுழுக்கு, கழுகுமலையில் ஒரு விடுதலைப் பயணம்” நூல்களை எழுதிய தந்தை ஜார்ஜ் அவர்களை நேரில் சந்தித்து அவர்களைக் குறித்த விபரங்களை சேகரிக்க நினைத்தேன். அதற்காக, அவர்கள் தற்போது பணியாற்றும் கொடை ரோடு அருகிலுள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்குச் சென்றிருந்தேன். எதற்காக வருகிறேன் என்பதையும் முன்கூட்டியே தெரியப்படுத்தி இருந்தேன். நான் நேரில் சென்ற போது, அவர்கள் எனக்காக எழுதித் தயாராக வைத்திருந்த குறிப்புகள் கண்டு வியந்தேன். அவர்கள் வாழ்க்கையைக் காலக்கோடு போல எழுதி வரிசைப்படுத்தி இருந்தார்கள். எந்தவொரு விஷயத்திலும் நாம் எப்படி முன் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்ல முன் மாதிரி. அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

வாழ்க்கைக் குறிப்புகள்:

23.04.1926  - தந்தை ர.ஜார்ஜ் அவர்கள் பிறந்த நாள்.

1932  -  1937  புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி, கழுகுமலை.

1937  -  1948 (6 முதல் பி.ஏ., வகுப்பு முடிய) சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டை.
(கழுகுமலையில் பி.ஏ., பட்டம் பெற்ற இரண்டாம் நபர் இவர். முதல் நபர் மாசிலாமணி ஆசிரியர் மகன் ஸ்தனிஸ்லாஸ் ஆவார்.)

07.06.1948  -  இயேசு சபை துறவறப் பயிற்சிக் கல்லூரியில் சேருதல் (கொடைக்கானல்)

16.06.1950  -  துறவறம் மேற்கொள்ளுதல் (மும்பை)

1950  -  1952  இலத்தீன் மொழி, ஆங்கில இலக்கியம் பயிலுதல் (மும்பை)

1952  -  1953  மெய்யியல் கற்றல் (பூனே)

1953  -  1955  மெய்யியல் படிப்பு தொடர்ச்சி (கொடைக்கானல்)

1955  -  1957  ஆசிரியர் & விடுதிக் காப்பாளர்
புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி, மதுரை.

1957  - 1961  இறையியல் படிப்பு (பூனே)

24.03.1960  குருப்பட்டம் (பூனே)

1961  -  1962  புனித சவேரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட். கற்றல். (பாளை)

1962  -  1963  இயேசு சபையில் இறுதிப் பயிற்சி (கொடைக்கானல்)

1963  -  1966  ஆசிரியர், திருச்சி புனித வளனார் உயர்நிலைப் பள்ளி,
கத்தோலிக்க விடுதிகளின் பொதுக் கண்காணிப்பாளர்,
கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1966  -  1969  தலைமையாசிரியர், புனித அருளானந்தர் உயர்நிலைப் பள்ளி, ஓரியூர்.

1969  -  1972  தலைமையாசிரியர் & இல்லத் தலைவர்,
கார்மல் உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.

1972  -  1975  துணை முதல்வர், புனித வளனார் கல்லூரி, திருச்சி;
கல்லூரி விடுதிக் கண்காணிப்பாளர்; கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1975  -  1976  துணை முதல்வர், புனித அருளானந்தர் கல்லூரி, கருமாத்தூர். கல்லூரி விடுதிக் கண்காணிப்பாளர்; கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1976  -  1980  ஆசிரியர் & விடுதிக் கண்காணிப்பாளர், புனித மரியன்னை உயர்நிலை பள்ளி, மதுரை.

1980  -  1981  தலைவர், லொயோலா தொழிற்பயிற்சிப் பள்ளி, மதுரை.

1981  -  1984  முதல் தலைமையாசிரியர், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, கொசவபட்டி.

1984 மே - ஆசிரியர் பணி ஓய்வு

1984  -  1997  வெளியீட்டு மேலாளர், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

1997  -  2000  நிதிப் பொறுப்பாளர், புனித வளனார் கல்லூரி, திருச்சி.

2000  -  2001  இளைப்பாறுதல்

2001  -  2006  விடுதிக் கண்காணிப்பாளர், லொயோலா தொழிற்பயிற்சிப் பள்ளி, மதுரை.

2006  -  2009  உதவி மேற்பார்வையாளர், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

2009 முதல் - விடுதிப் பணியாளர், புனித ஜோசப் கருணை இல்லம், மெட்டூர் கேட்.
* * *

Monday, 14 January 2013

அகமதிப்பீட்டுத் தேர்வு (2012-2013)

கட்டுரைகளுக்கான தலைப்புகள்:

  1. டிசம்பர்-21, 2012-ல் ஏன் உலகம் அழியவில்லை?
  2. ஏதேனும் ஒரு நூல் ஒன்றினை மதிப்பீடு செய்க.
  3. சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இயற்கை மாற்றங்களும்.
  4. சமூகக் கருத்தோடு கூடிய உரையாடல்.
  5. உன் எதிர்கால இலட்சியம்.
  6. உன் மனங்கவர்ந்த அறிவியல் அறிஞர்.
  7. இன்றைய சூழலில் நீ முதலமைச்சரானால் என்னென்ன மாற்றங்கள் செய்வாய்?
  8. உன் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்.
  9. ‘விஸ்வரூபம்’ திரைப்படத் தொழில் நுட்பமும், வர்த்தகப் போராட்டங்களும்.
  10. நீ மாதிரியாக(Role Modelஆக) கருதும் ஒரு நபருடன் நேர் காணல். 
 குறிப்புகள்:
1.       A4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல்,ஏதேனும் ஐந்தினுக்கு மட்டும் எழுதுக.
2.       பயனுள்ள தொடுப்புகள் சில:

Monday, 12 November 2012

'தீப ஒளி' பரவட்டும்!


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

உண்மையான மகிழ்ச்சி என்பது விழாக்களை நாம் பாதுகாப்பாகக் கொண்டாடுவதில்தான் இருக்கிறது. பாதுகாப்பு என்பது நமக்கு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ளவருக்கும், சுற்றியுள்ளவைகளுக்கும்தான். இதைத்தான் ரஞ்சித் எழுதிய உயிரின்வலி சிறுகதை நமக்குச் சொல்கிறது.

வெடிகளைப் பொருத்தவரை தயாரித்து கடைகளில் கொலு ஏறும்வரை ஒருநிலை. அதை உயிர்மையில் வந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரை காட்டுகிறது. அதை நாம் வாங்கி கொளுத்திய பின்புள்ள அடுத்த நிலையைக் கீற்றில் வந்த கட்டுரை விளக்குகிறது.

இம்மாணவப் பருவத்தில் இவ்விரண்டையும் அறிந்துகொள்வது மட்டுமின்றி, உங்களின் நட்புக்குரியவர்களுக்கும் இதைக் கூறுங்கள். மேலும், தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கூந்தன்குளம், கிட்டாம்பாளையம், வேட்டன்குடி ஆகிய கிராமங்களில் அதிகமான பறவைகள் வசிப்பதால் அங்குள்ளவர்கள் யாரும் வெடி வெடிப்பதில்லை. இதை அங்குள்ள சிறுவர்களே மகிழ்ச்சியாகக் கூறுகிறார்கள்.

தீப ஒளி உங்கள் உள்ளங்களிலிருந்து இல்லங்களில் பரவட்டும்.

Thursday, 27 September 2012

ஓவியக் கண்காட்சி


அன்பு மாணவர்களுக்கு,
வணக்கம்.
புளியங்குடி, எஸ்.வீராச்சாமி செட்டியார் கல்வியியல் கல்லூரியில் இன்று
(27- 09 – 2112) ஓவியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்ரு, அதே கல்லூரியின் விளம்பரக் கலை விரிவுரையாளர் கமலக் கண்ணன், குறும்பட இயக்குநர் கணபதி, எஸ்.கொண்டல்ராஜ் மற்றும் தென்காசி வட்ட ஓவிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், புளியங்குடி எம்.முத்துராமலிங்கம், நெல்லை பொன்வள்ளிநாயகம் ஆகியோரும் வந்திருந்தனர்.

கண்காட்சியில் மேலுள்ள ஓவியர்களின் ஓவியங்களும், ம.செ., மாருதி போன்றோரின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. கல்லூரி மாணவர்களின் ஓவியங்களும் ஆங்காங்கே இருந்தன.

தேங்காய் செரட்டையில் கார்விங் வேலைகளுடன் இருந்தது நம்மை வியக்க வைத்தது. மாணவர்கள் செய்திருந்த களிமண் சிலைகளும் அங்கு இருந்தன. விழா மற்றும் கண்காட்சி ஏற்பாடுகளை கல்லூரியோடு சேர்ந்து எஸ்.எஸ்.மணியன் கலைக் கூடம் செய்திருக்கிறது. கண்காட்சி 28, 29 – 09 – 2112 ஆகிய இரு நாட்கள் இருக்கும்.

கலை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம். அவசர உலகில் அதைப் பழகவும் முடியாமல், ரசிக்கவும் முடியாமல், இன்றைய நெருக்கடியில் மூழ்கி மனிதன் பாழாய் போய்க் கொண்டிருக்கிறான். நம் அன்றாடப் பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்வதற்கு கலையை ரசிப்பது மிக அவசியம் என்று அறிஞர் அண்ணா கூடக் கூறுவார்.

நம் அருகில் ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் நண்பர்களோடு சேர்ந்து சென்று தவறாமல் பார்த்து வாருங்கள்.

Friday, 3 August 2012

நிறைகளை நினையுங்கள்!


கழுகுமலை ஆர். சி. சர்ச்சின் பங்குத் தந்தையாக விசுவாசம் ஆரோக்கியராஜ் அவர்கள் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகின்றன. அவர் மாணவர்களுக்கு மத்தியில் பேசும் போதெல்லாம், கல்வியிலும் உடல் நிலையிலும் பின்தங்கி இருப்போரைப் பற்றி அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்கிறார். காரணம், அவருடைய குழந்தைப் பருவம் மற்றும் மாணவப் பருவம் அத்தகையதாய் இருந்திருக்கிறது.

சிறு வயதில் நீண்ட நாட்களாக அவரால் நடக்க முடியாமல் இருந்தது, கடவுள் நம்பிக்கையால் மன வலிமை பெற்று நடந்தது - இவை அவரது துறவற விருப்பத்திற்கு காரணமாய் இருந்திருக்கின்றன. தன் பள்ளிப் படிப்பை கழுகுமலை ஆர்.சி. சூசை பள்ளியில் முடித்திருக்கிறார். அப்போது அவருக்குப் பேச்சு சரியாக வராமல் இருந்திருக்கிறது. வார்த்தைகளைத் திக்கித்திக்கி பேசுவதால் பிற மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கின்றனர். இதனால், அவருக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் எழுந்திருக்கிறது. படிப்பிலும் மிக சுமாராகவே இருந்திருக்கிறார். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி பயத்தில் இருந்தவர், கடவுள் மேல் நம்பிக்கை வைத்துப் படித்ததால் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார். குருமாணவர் படிப்பின் போதும் பேச்சு அவருக்கு அப்படியேதான் இருந்திருக்கிறது. அவரின் மேற்பார்வை குருவானவர், இவருக்கு பேச்சு சரியாக வராததையும், இவரால் எப்படி போதிக்கும் பணியை சரிவர செய்யமுடியும் என்பதையும் ஏக்கமாக அவரின் மேலாளருக்குக் கடித்தத்தில் எழுதியுள்ளார். இருப்பினும், தன் இறுதி ஆண்டில் கடவுளின் அருளால் பேச்சு சரியானதை நினைத்து மகிழ்ந்துரைக்கிறார்.

பட்டதாரியான அவர் இப்போது எவ்விதத் தடையும் இன்றி திடமான குரலில் அழகாகப் பேசுகிறார். அவரது பேச்சில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஒரு செடி சரியாக வரவில்லை என்று உடனே பிடுங்கி எரிந்து விடாதீர்கள். அதன் மீது கொஞ்சம் அக்கறை கொண்டு கவனித்தால் போதும், அதுவே பின்னாளில் நற்பலன் தரும் மரமாக மாறும். இதை கூறிவிட்டு அதற்குத் தன்னையே சான்றாகக் கூறுகிறார். “உங்களுடைய நிறைகளை நினைத்து முன்னேறுங்கள், குறைகளை அல்ல” என்பதை  “Count your blessings, not your worries” என்கிறார்.

உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் ஒருவர் சோர்ந்து போய் விடக் கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாக இருக்கிறார். அவரது வாக்கும் போக்கும் ஏதாவது ஒரு வகையில் நமக்குத் தூண்டுதலாக இருந்தால், அதுவே நம் வாழ்க்கைக்கு விளக்கு!

Saturday, 28 July 2012

கணிப்பொறியில் அலகிடுதல்!


பெங்களூரிலிருந்து கடந்த முறை கழுகுமலைக்கு ரஞ்சித் வரும் போது, கணிப்பொறித் தமிழ் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, “கணிப்பொறி மென்பொருள் வழி தமிழிற்கு ஏதாவது செய்ய வேண்டும். குறிப்பாக, கணக்கு போல இருக்கும் புணர்ச்சி விதியை – மென்பொருள் கணக்கீட்டிற்குள் கொண்டு வர முடியுமா?” என்றான். “முடியும்.”என்றேன்.
தொடர்ந்து,“புணர்ச்சியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் விதிகளுக்கு உடன்படாதவைகளும் உண்டு. அவற்றிக்குத் தீர்வு புறனடையில் கூறப்படும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், முதலிலேயே பெரிய ஒன்றை எடுத்து, ஏதோ ஒரு சிறு சிக்கல் ஏற்படும் போது, நம் ஆர்வமும் தடைபட்டுவிடக் கூடாது. எனவே, முதல் முயற்சியாக, குறைந்த வரையறைகளே உள்ள திருக்குறளுக்கான அலகிடுதலை செய்து பார்த்தால் என்ன?” என்றேன். “அதுவும் சரிதான்” என்றவன், பள்ளியில் படித்ததை மீண்டும் கேட்டு குறிப்பெடுத்துச் சென்றான்.

இம்முறை வரும் போது, அலகிடுதலுக்கான மென்பொருளை மிக அழகாக, நேர்த்தியாக எழுதி வடிவமைத்துக் கொண்டு வந்தவன், என் வீட்டிலுள்ள கணிப்பொறியில் அதை இன்ஸ்டால் செய்து இயக்கிக் காண்பித்தான். பிரமாதம்! திருக்குறளை டைப் செய்து ‘அலகிடவும்’ கட்டத்தை ‘கிளிக்’ செய்தால் போதும். அடுத்த நொடி, குறளிலுள்ள ஏழு சீர்களும் சீர், அசை, வாய்ப்பாடு என்ற முறையே அலகிடப்பட்டு திரையில் தோன்றியது. வியந்து போனேன்.
என்னையும் ஒரு திருக்குறளை டைப் செய்து பார்க்கச் சொன்னான். டைப் செய்து கிளிக் செய்தேன். அலகிடப்பட்ட விடை அழகாக வந்தது. ஒவ்வொரு சீரையும் அசை பிரித்து, அதன் அருகிலேயே அதற்கான குறில், நெடில் குறிப்பும் இடம் பெற்று தெளிவுறத் தோன்றியது. இதற்காக, மூன்று விதமான நிரல் மொழியைப் பயன்படுத்தியதாகக் கூறினான்.
இதைக் காணும் மாணவர்களுக்கு தமிழைக் கற்பதில் ஆர்வம் வருவது மட்டுமின்றி, தமிழை இவ்வாறு புது வடிவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற அவாவும் கண்டிப்பாகப் பிறக்கும். ஏடுகளில் தூங்கும் தமிழை - கணிபொறியில் கொண்டு செல்வதால் தமிழின் வயதும், வாழ்வும் நீளும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இன்றைய இளையோர் இதை செய்வது மிகுந்த வரவேற்புக்குரியது.

ரஞ்சித்தின் இந்த வெற்றி, புணர்ச்சி விதி முயற்சிக்குக் கம்பளம் விரித்து விட்டது!

Wednesday, 25 July 2012

ஒரு மாணவனின் வாக்குமூலம்!


பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தபின், என்ன க்ரூப் எடுக்கலாம் என்று ஒரு சின்ன குழப்பம். சரியான ஆளிடம் கேட்டுத் தெளிந்திருக்க வேண்டும்.  உண்மையில் எனக்கு அக்கறை போதாது. பத்தாவதில் நல்ல மார்க் வாங்கிய  எல்லாரும் First க்ரூப் மட்டும் தான் எடுப்பார்கள் என்பதால் நானும் அதையே எடுத்தேன். படிக்கும் போதும் கஷ்டம் எதுவும் இல்லை. + 2 வில்   90 % மார்க் எடுத்தேன். ஆனால், காலேஜில் சேர்ந்த பின்தான் புரிய ஆரம்பித்தது,  நான் படித்த உயிரியல் எனக்குப் பயன்படப் போவதில்லை என்று! .


எனக்கு முதலில் இருந்தே டாக்டர் ஆகும் எண்ணம் கிடையாது. அதனால்தான் என்ட்ரன்ஸ் கூட எழுதவில்லை. +2  பப்ளிக் உயிரியல் தேர்விற்கு முந்திய நாள் சர்ச்சில் தமிழாசிரியரோடு பேசிக்கொண்டிருந்த போது, “நாளைக்கி பரிட்சதானடா?” என்றார். “பாசாகப் படிச்சிருக்கேன் சார்!” என்றேன். வாங்கியதிலேயே  குறைவு அதில்தான்.


காலேஜ் முதல் வருடத்தில், முதல் செமஸ்டரில் சாதாரண MS Office  தான் பாடம். எனக்கு கம்ப்யூட்டரை ஆன் பண்ணக்கூடத் தெரியாது. நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒருமுறை CPU வை ஆன் பண்ணாமல் மானிட்டரை மட்டும் ஆன் பண்ணி, ஒன்னும் இயங்காததால் ஸ்ரீதேவி மேடத்திடம் சிஸ்டம் ரிப்பேராகி விட்டது என்று சொல்லித் திட்டு வாங்கினேன். இன்னொரு முறை திடீரென்று கரன்ட் போய், Shut down  பண்ணச் சொன்னதற்கு, அப்படியே மெயின் சுவிட்சை அணைத்து விட்டேன்.

இன்னொரு முறை , " Press  Any  Key  to  Start Windows " என்று மெசேஜ் வந்த பின்னும் நான் எதையும் செய்யாமல் இருந்ததைக் கண்ட மேடம், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள்.  "Any என்கிற Key, Key board ல் எங்கிருக்கிறது ?” என்று கேட்டேன் . "வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவேன், இந்த கிண்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்" என்று மேடம் மிகவும் கோபத்தோடு திட்ட, உண்மையிலேயே  எனக்கு தெரியாது என்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லப் படாத பாடு பட்டு விட்டேன்.

முதல் செமஸ்டராவது பரவாயில்லை. இரண்டாவது செமஸ்டரில் C ++ போன்ற பாடங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிலிருந்து ஒரு புதிய விரிவுரையாளர் வந்தார். அவர் சொல்வது வகுப்பில் 95 % பேருக்குப் புரியும். என்னை மாதிரி ரெண்டு மூனு பேர் பரிதாபமாக உட்கார்ந்திருப்போம். எல்லாப் பையன்களும் லேபில் நிறைய மார்க் வாங்கி பெர்சென்டேஜை உயர்த்திக் கொள்வது பற்றிய கனவில் இருக்க, நானெல்லாம் பாசாக வேண்டுமே என்ற பரிதவிப்பில் இருப்பேன்.


நான் மூன்றாம் வருடம் படிக்கும் போது, என் தம்பி +1 முதல் க்ரூப்பில் சேர்ந்தான். மேலே சொன்னதை எல்லாம் எங்கள் வீட்டில் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து அவன் என்னிடம் போனில் பேசும் போது, " அண்ணே கஷ்டமா இருக்கு, நானும் டாக்டர் எல்லாம் ஆகனும்னு நினைக்கலே, தாவரவியலுக்குத் தனியா, விலங்கியலுக்குத் தனியா ஏகப்பட்ட ரெக்கார்ட் எழுத வேண்டி இருக்கு, எவ்வளவு தான் முயற்சி செய்து படம் வரைந்தாலும் நல்லா  வரமாட்டக்கி. முழு மதிப்பெண் வாங்க வழியே இல்ல. க்ரூப் மாறி விடட்டுமா" என்று கேட்டான். எனக்குத் தயக்கமே இல்லை.

எங்கப்பா மட்டும் காலாண்டு பரிட்ச வந்திருச்சே, இனிமேல் எப்படி க்ரூப் மாற்ற முடியும் என்றார், அவருக்கும் First க்ரூப்பில்தான் மகன் படித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. படிச்சி எந்த வேலைக்குப் போனாலும், திறமை இருக்கறவன்  முன்னேறிருவான் என்பது அவர் பாலிசி!

பள்ளி தலைமையாசிரியர், “க்ரூப் மாற்றி விடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்ல, விருப்பமில்லாத படிப்பை வீம்புக்கு படிக்க வேண்டியதில்ல, உன்னால இனி  பிக்கப் பண்ணிற முடியுமா?" என்று மட்டும் கேட்டார். “முடியும்” என்றதும் மாற்றியும் விட்டார். என் தம்பி என்னை மாதிரி இன்ஜினியரிங் படிக்கும் போது கஷ்டப்படவில்லை!


என் தம்பிக்கு என்ன சொன்னேனோ , அதையே இப்போது பத்தாவது முடித்து +1  சேரவிருக்கும்/சேர்ந்திருக்கும் தம்பி/தங்கைகளுக்கும் கூறுகிறேன். ஒரு கனவை சிதைக்கும் உரிமை எனக்கு இல்லை, நீங்கள் டாக்டராகத்தான் ஆவேன் என்ற கனவில், கடும் முயற்சியோடு படித்தால் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் கனவு நிறைவேற, ஒரு நல்ல மருத்துவர் சமூகத்திற்கு கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன் .


டாக்டர் மட்டுமல்ல
, வேளாண் அறிவியல், பயோ டெக்னாலஜி போன்ற உயிரியல் பிரிவுகளும் உள்ளன. அவையும் முக்கியமானவையே! அந்தப் படிப்பாலும் நீங்கள் சமூகப் பணியாற்றவோ, நன்றாக சம்பாதிக்கவோ முடியும்தான். ஆனால்,  இவையல்லாத வேறு பிரிவை நீங்கள் காலேஜில் தேர்ந்தெடுத்தால், சிரமப் படப்போவதும் நீங்கள் தான்!


சும்மா, First  க்ரூப் எடுத்தாதான் மதிப்பு என்பதற்காகவோ, அப்பா சொல்றார் , அம்மா சொல்றார் என்பதற்காகவோ உங்களுக்குக் கஷ்டமாக இருப்பதைச்  செய்யவேண்டாம். கம்ப்யூட்டர் சயின்சும் ஈசியான பாடமல்ல, கஷ்டப்பட்டுத்தான்  அதையும் படிக்க வேண்டும். ஆனால், நீங்கள் பொறியியலோ, வேறு அறிவியல் பிரிவோ எடுத்துப் படிக்கும் போது கஷ்டப்பட வேண்டி இருக்காது.


எனக்கு ஒரு மேதாவி அறிவுரை சொன்னார், "நீ கம்ப்யூட்டரை எப்ப வேணும்னாலும் பிரைவேட்டா படிச்சுக்கலாம், ஆனா பயாலஜியை ஸ்கூலில் படித்தால்தான் உண்டு"  என்று. மேம்போக்காகப் பார்த்தால் கிளர்ச்சி கொடுக்கும் இந்த வாக்கியம், பிராக்டிக்கலாக உதவாது.


இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் இந்த நான்கு பிரிவிற்கும் ரெக்கார்டு நோட் எழுதி, படம் வரைந்து, பாடங்களையும் படித்து, இவை போக  இரண்டு பாகங்களாக கணிதம், ஆங்கிலம், தமிழ் தலா இரண்டு பேப்பர்கள் இவற்றையும் படித்து விட்டு, நீங்கள் ஓய்வு நேரத்தில் ஆயிரக் கணக்கில் பணம் கட்டி கம்ப்யூட்டரும் படிப்பீர்களாக்கும்? போங்கடே...போங்க!  


அதனால, உங்க வாழ்க்கை இப்ப உண்மையிலேயே உங்க கையில் தான். ஒன்னுக்கு பத்து தடவ யோசிச்சு முடிவு பண்ணிக் கோங்க!