Sunday, 8 September 2013

குழந்தைகளும் தொலைக்காட்சியும்!



‘குழந்தைகளும் தொலைக்காட்சியும்’ பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன பதிலுரையே இது.

நானும் அருண்மொழியும் 2002 வாக்கில் ஒரு ரயில் பயணத்தில் குழந்தைகளிடம் தொலைக்காட்சி உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய கட்டுரையை வாசித்தோம். சிறுவனாக இருந்த அஜிதனுக்கு அந்தக் கட்டுரையில் இருந்ததை நான் விளக்கிச் சொன்னேன். எங்கள் வீட்டில் தொலைக்காட்சி தேவையில்லை என்ற முடிவை அவனும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது சைதன்யா சின்னக் குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.

வரைகலை கதைத்தொடர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொலைக்காட்சியே குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது என்பதே என் எண்ணம். பல பெற்றோர் தங்களுக்குத் தொலைக்காட்சிப் பித்து இருப்பதை மறைக்க ‘டிவியிலே நல்ல புரோக்ராம்லாம் கூட வருதே…இப்ப டிஸ்கவரி சேனல் இல்லியா?’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் தொலைக்காட்சி எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. வீட்டில் தொலைக்காட்சி இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக் கூடியது.

காரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். தொலைக்காட்சி மிகப் பிரம்மாண்டமான ஒரு பொது ஊடகம். கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாக வேண்டும். ஆகவே அது மிகவும் சராசரியாகவே நிகழ்ச்சிகளை அளிக்கமுடியும். அது பொது ஊடகத்தின் கட்டாயம்.

ஆகவே, தொலைக்காட்சி அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான நிகழ்ச்சிகளை உருவாக்கும். உச்சகட்ட விளம்பரம் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.

கச்சிதமான சராசரியாக அமைந்த நிகழ்ச்சியே வெற்றிபெறும், அதற்குத்தான் அதிக நிதி கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்சியானதாகவும் இருக்கும்.

அதிகமாக வெற்றி பெறும் நிகழ்ச்சி, அதாவது மிகச்சராசரியான நிகழ்ச்சிதான் வசதியான நேரத்தில் ஒளிபரப்பாகும். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.

இதன் விளைவாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அனைவரும் சராசரி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்படி சிக்கவைக்கப் படுகிறார்கள். அவர்களின் ரசனையும் அறிவுத்திறனும் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றன.

இது குழந்தைகளுக்கு மிக ஆபத்தானது. ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய தனித்தன்மையைக் கண்டடைந்து அதை வளர்த்துக் கொள்ளவேண்டிய வயதில் சராசரித் தன்மையில் சிக்கிக் கொள்கிறார்கள். சராசரி உணர்ச்சிகளும் ரசனைகளும் அறிதல்களும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.

தொலைக்காட்சி நமக்குத் தெரிவுகளை அளிப்பதில்லை. அது அளிப்பதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. சிந்திக்க விடாமல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அது நம்மை அடித்துச் செல்லும் தன்மை கொண்டது. நம் செய்தி – விவாத நிகழ்ச்சிகளை மட்டும் பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக் கொள்ளும். நீங்களும் விவாதித்துக் கொண்டே இருப்பீர்கள்.

ஆனால் ஒருவாரம் முழுக்க இந்த விவாத நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது ஒரு நல்ல கட்டுரையளவுக்குக் கூட இருக்காதென்பதை யோசித்தால் புரிந்து கொள்ளலாம்.

வரைகலை கதை நிகழ்ச்சிகள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் குழந்தைகளின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை பின்னூட்டங்கள் மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டவை. ஆகவே குழந்தைகளை மிக எளிதாக அவை உள்ளே கொண்டு சென்றுவிடுகின்றன.

இந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவது போல. மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க் குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கி வாழ்தலுக்காக, தாக்குப் பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. காட்சி ஊடகம் அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதி செய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.

மொழிவழிக் கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத் தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.

காட்சி ஊடகங்கள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடைய வேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் காட்சி ஊடகங்களில் நுழைவதனால் அது சிந்திக்கத் தெரியாததாக ஆகி விடுகிறது.

கடைசியாக, தொலைக்காட்சி போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட ஊடகம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. என் புரிதலில் குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக் கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. நாம் அவர்களிடம் பேசுவதும் அவர்கள் நம்மிடம் பேசுவதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச் சூழ்ந்திருக்கும் சமூகத்துடன் உறவு கொள்கிறது. அதைப் புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. அதில் தன் இடத்தைக் கண்டடைகிறது.

நான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக உரையாடுபவனாக இருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். [சைதன்யாவின் பேச்சை ஒரு நூலாகவே எழுதியிருக்கிறேன்] குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் சொல்வார்கள். கூடவே, ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனைப் பள்ளி, கற்பனை நண்பர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்து கொள்வதற்கான வாசல் அது.

உரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் குடும்பம் உருவாகிறது. சமூகம் உருவாகிறது. அதை தொலைக்காட்சி அடிமைத்தனம் அழிக்கிறது.

தொலைக்காட்சி குழந்தைகளை வாசிப்பிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்றும் புத்தகங்களே அறிவுக்கான ஒரே வழி. நாளெல்லாம் தொலைக்காட்சி பார்க்கும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.

ஏனென்றால், புத்தகங்கள் நம்மை செயல்படச் செய்கின்றன. நாம் வாசிக்கும்போது அந்த நூலை நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக் கொள்கிறோம். அது ஓர் உழைப்பு. எந்த உழைப்பும் நம்மை மேலும் தகுதி கொண்டவர்களாகவே ஆக்கும்.

ஆனால் தொலைக்காட்சி பார்க்கையில், எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் எதையும் செய்வதில்லை. அது நம் மீது அருவி போல கொட்டிக் கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில தகவல்களை, காட்சிகளை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக் கொண்டு மேலே செல்வதில்லை.

புத்தகங்கள் முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்கள் முடிவில்லாதவை. புத்தக உலகில் நுழையும் குழந்தை, தான் யாரெனத் தானே கண்டு கொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.

அதே சமயம் காட்சி ஊடகத்தை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. தொலைக்காட்சிக்குப் பதிலாக மிகச்சிறந்த திரைப்படங்களை, ஆவணப்படங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன். மிகநல்ல ஒரு சேகரிப்பு அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு உதவியானது. இன்று உலகின் மிகத்தரமான புதிய ஆவணப்படம் எது என என் மகனிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்தத் திரைப்படம் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.

என் இரு குழந்தைகளும் மகத்தான வாசகர்கள். அதற்கு நான் தொலைக்காட்சியை நிறுத்தியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.

* * *

Friday, 9 August 2013

வளமாக வாழ நெஞ்சில் நிறுத்துவோம்!

அருட்சகோ.மரியண்ணன் அவர்கள், கழுகுமலை ஆர்.சி.சூசை மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது, அவர் எழுப்பிய பள்ளிப் பாதுகாப்புச் சுவற்றில் பார்ப்போர் மனம் பண்படும்படியான பொன்மொழிகளைத் தொகுத்து எழுதினார். தமிழ் நீதிநூல்களில் இனியவை நாற்பது, இன்னா நாற்பது என்பன போல இதனை “அண்ணன் மொழி 130” என்றும் கூறலாம். வளமாக வாழ நினைப்போர் இதை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளலாம்.
 
1.         அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
2.         அகந்தூய்மை வாய்மையால் அமையும்.
3.         அகிலம் போற்ற அன்பைப் போற்று.
4.         அதிர்ஷ்டத்தை அல்ல உழைப்பை நம்பு!
5.         அமைதி இறைவனது குடிசை.
6.         அறியாமை அகல ஆழ்ந்துபடி.
7.         அறிவு அனுபவத்தின் வெகுமதி.
8.         அறிவுக்கு அளவுகோல் மதிப்பெண் மட்டுமல்ல.
9.         அன்பிருக்குமிடத்தில் மன்னிப்பு வழிந்தோடும்.
10.      அன்புள்ள இதயம் ஆனந்தத்தின் ஊற்று.
11.      அன்பே வாழ்வின் ஆணிவேர்.
12.      ஆசை முடிந்தால் தான் அமைதி.
13.      ஆழமான அன்பு அச்சத்தை அகற்றும்.
14.      ஆற்றலை விட ஆர்வமே வெற்றிக்கு ஆதாரம்.
15.      இணைந்து திட்டமிடுவோம்; முனைந்து செயல்படுவோம்.
16.      இறைஞானம் பெற சிலுவையனுபவம் தேவை.
17.      இறைவன் ‘அற்புதங்களை’ மனிதன் வழியாகச் செய்கிறார்.
18.      இறைவன் துணையில்லாதவன் ஏழை.
19.      இறைவனின் இல்ல அடித்தளம் அன்பு.
20.      இறைவனின் மறு உருவம் குழந்தைகள்.
21.      உண்மைக்காக எதையும் துறக்கத் தயங்காதே!
22.      உண்மைதான் மனிதனின் மாண்பு.
23.      உண்மையே உன்னை உயர்த்தும்.
24.      உணவு கொடுப்பதும் உயிர் கொடுப்பதே!
25.      உயர்ந்த சிந்தனை உன்னை உயர்த்தும்.
26.      உயர்வோ தாழ்வோ நிதானம் தேவை.
27.      உருகும் மெழுகே ஒளி தரும்.
28.      உலகிலிருப்பது பற்றாக்குறையல்ல; பகிராக்குறை!
29.      உழவு செழிக்க; உலகம் செழிக்கும்!
30.      உழைப்பில்லையேல் செழிப்பில்லை.
31.      உழைப்பின் வேர்கள் கசப்பானாலும் கனி இனிக்கும்.
32.      உழைப்பே உண்மை சுதந்திரம்.
33.      உழைப்பே உயர்வு.
34.      உள்ளத்தின் விளக்கு சிந்தனை.
35.      உள்ளத்து ஊனமே ஆபத்தானது.
36.      உள்ளுக்குள் பயந்தால் உலகில் வாழ்வேது.
37.      உளி விழுவது வலியென அழும் கற்கள் சிற்பங்களாக!
38.      உற்சாகம் வாழ்க்கைக்கு உரம்!
39.      உற்ற நட்பே உயிருக்கு அமிர்தம்.
40.      உறவுப் பூக்கள் வாழ்வின் வேர்கள்.
41.      உறவு வாழ்வை அழகுபடுத்தும்.
42.      உன் பிரசன்னம் உணரப்படட்டும்.
43.      உன்னைப்போல் பிறரையும் நேசி.
44.      உன்னைப்போன்று வேறொருவன் உலகில் இல்லை.
45.      உன்னையே நீ அறிந்துகொள்.
46.      உனக்கென்று தனிச்சிறப்பு உண்டு.
47.      எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார் இயேசு.
48.      எதிர்ப்பின்றி வளர்ச்சியில்லை.
49.      எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.
50.      எறும்பு ஊறக் கல்லும் தேயும்.
51.      ஒதுக்குவதும் ஒடுக்குவதும் ஒடுங்குவதும் பாவம்.
52.      ஒருவரைத் தனிமைப்படுத்துவது சமூகப்பாவம்.
53.      ஒழுக்கமே கடவுளின் முதல் கட்டளை.
54.      ஒளியாகவும் வழியாகவும் வாழ்வோம்.
55.      ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
56.      கடமையைச் செய்து உரிமையைப் பெறு.
57.      கடமையைச் செய்து விட்டு கடவுளை நினை.
58.      கடவுள் ஆள் பார்த்து செய்பவர் அல்லர்.
59.      கடவுள் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை.
60.      கடின உழைப்பே தெய்வ வழிபாடு.
61.      கல்வியே கவலைக்கு மாற்று வழி.
62.      கல்வி வாழ்வின் உயிர்மூச்சு.
63.      கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.
64.      கற்றபின் நிற்க அதற்குத் தக.
65.      கன்னங்கள் நனைந்தாலும் கருத்துக்கள் சிறக்கட்டும்.
66.      கனவு வசப்பட வேண்டும்.
67.      குழந்தை வருமானம் குடும்ப அவமானம்.
68.      குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
69.      கொடுப்பதில்தான் இன்பம்; பெறுவதிலல்ல.
70.      செபிக்காத மனிதன் வேரில்லாத மரம்.
71.      செய்யும் தொழிலே தெய்வம்.
72.      செயலாக்கம் பெற்ற அறிவுதான் ஞானம்.
73.      செல்வம் என்பது சிந்தையின் நிறைவு.
74.      சிக்கனம் வாழ்வை சிறக்கச் செய்யும்.
75.      சிந்தனையே செயலின் அடித்தளம்.
76.      சுடும்வரை நெருப்பு; போராடும்வரை மனிதன்.
77.      சுத்தம் சுகம் தரும்.
78.      சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும்.
79.      சொற்கள் நீர்க்குமிழிகள், செயல்கள் தங்கத்துண்டுகள்.
80.      தவறை ஏற்கும் தைரியம் சிறந்தது.
81.      தன்னடக்கம் நல்ல வலிமை.
82.      தன்னை ஏற்றுக் கொள்பவன் பிறரையும் ஏற்றுக்கொள்கிறான்.
83.      தன்னை நம்புகிறவன் தலைவனாகிறான்.
84.      தாழ்ச்சி இல்லையேல் தடுமாறுவாய்.
85.      திட்டமில்லா செயல் நஷ்டமே.
86.      துணிந்து விட்டால் தூண்கூடத் துரும்பு.
87.      துணிவு உடலையும் உள்ளத்தையும் வலுவாக்கும்.
88.      துன்பம் எல்லோரையும் திருத்திவிடும்.
89.      தொண்டு தூயமனத்தின் செயல்பாடு.
90.      நண்பனை இரகசியமாகத் திருத்து.
91.      நம்பிக்கை தரும் வலிமைக்கு ஈடு இணை இல்லை.
92.      நம்பிக்கையே செயலின் வழித்தடம்.
93.      நல்ல நண்பன் உறுதியான நங்கூரம்.
94.      நல்ல நூல்களே சிறந்த நண்பர்கள்.
95.      நல்லெண்ணம் நற்பலன் தரும்.
96.      நற்செயல்கள் ஒளிபோல் சுடர்விட்டுத் திகழும்.
97.      நன்மை செய்ய மனம் தளரவேண்டாம்.
98.      நன்றே செய்; இன்றே செய்.
99.      நாட்டுப்பற்று இல்லாதவன் நடைபிணம்.
100.  நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாக மாறி விடுவோம்.
101.  நிறைகள் நீங்கின் குறைகள் குவியும்.
102.  நீ இங்கு சரித்திரம் படிக்க மட்டுமல்ல; படைக்கவும் தான்.
103.  நீதியில்லா அன்பு போலித்தனமானது.
104.  நீங்களே கடவுளின் ஆலயம்.
105.  நீயே அமைதி குடியிருக்கும் விதை.
106.  நீயே உனக்கு நண்பனும் பகைவனும்.
107.  நோக்கு மாற நோக்கமும் மாறும்.
108.  பொதுப்பணி செய்வதில் போட்டி இருக்கட்டும்.
109.  மக்கள் வழிகாட்டிகள்; சமுதாயத் திசைகாட்டிகள்.
110.  மரங்கள் பூமித்தாயின் நுரையீரல்கள்.
111.  மன்னிப்பதில் மனம் தெளிவடைகிறது.
112.  மன்னிப்பதே மாபெரும் தண்டனை.
113.  மனந்திரும்பினால் மனிதம் திரும்பும்.
114.  மனவுறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.
115.  மனிதம் எங்கோ, தெய்வம் அங்கே!
116.  மனிதனின் முழுமை; இறைவனின் மகிமை.
117.  மாசகற்ற மரம் வளர்ப்போம்.
118.  மாற்றம் ஒன்றே மாறாத் தத்துவம்.
119.  முடியாதது முயலாதது மட்டுமே!
120.  முடியாதென்பது முட்டாள்களின் தத்துவம்.
121.  மூட நம்பிக்கைக்கு மருந்தில்லை.
122.  யாதும் ஊரே யாவரும் கேளிர்.
123.  வளராத நாட்கள் வாழாத நாட்களே.
124.  விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு.
125.  விழிப்புணர்வே சமுதாய வளர்ச்சியின் அடித்தளம்.
126.  விளக்கின் ஒளி விளக்குக்கல்ல.
127.  வினாக்களின்றி விடுதலையில்லை.
128.  வீழ்வதைவிட வீழ்ந்து கிடப்பதே வெட்கம்.
129.  வெற்றிக்கு ஏணி மனவுறுதி.
130.  வெறுங்கை மூடத்தனம், விரல்கள் மூலதனம்.
* * *

Friday, 3 May 2013

முன் மாதிரி விஷயம்!


“இரத்தத்தில் திருமுழுக்கு, கழுகுமலையில் ஒரு விடுதலைப் பயணம்” நூல்களை எழுதிய தந்தை ஜார்ஜ் அவர்களை நேரில் சந்தித்து அவர்களைக் குறித்த விபரங்களை சேகரிக்க நினைத்தேன். அதற்காக, அவர்கள் தற்போது பணியாற்றும் கொடை ரோடு அருகிலுள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்குச் சென்றிருந்தேன். எதற்காக வருகிறேன் என்பதையும் முன்கூட்டியே தெரியப்படுத்தி இருந்தேன். நான் நேரில் சென்ற போது, அவர்கள் எனக்காக எழுதித் தயாராக வைத்திருந்த குறிப்புகள் கண்டு வியந்தேன். அவர்கள் வாழ்க்கையைக் காலக்கோடு போல எழுதி வரிசைப்படுத்தி இருந்தார்கள். எந்தவொரு விஷயத்திலும் நாம் எப்படி முன் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்ல முன் மாதிரி. அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

வாழ்க்கைக் குறிப்புகள்:

23.04.1926  - தந்தை ர.ஜார்ஜ் அவர்கள் பிறந்த நாள்.

1932  -  1937  புனித மரியன்னை ஆரம்பப் பள்ளி, கழுகுமலை.

1937  -  1948 (6 முதல் பி.ஏ., வகுப்பு முடிய) சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டை.
(கழுகுமலையில் பி.ஏ., பட்டம் பெற்ற இரண்டாம் நபர் இவர். முதல் நபர் மாசிலாமணி ஆசிரியர் மகன் ஸ்தனிஸ்லாஸ் ஆவார்.)

07.06.1948  -  இயேசு சபை துறவறப் பயிற்சிக் கல்லூரியில் சேருதல் (கொடைக்கானல்)

16.06.1950  -  துறவறம் மேற்கொள்ளுதல் (மும்பை)

1950  -  1952  இலத்தீன் மொழி, ஆங்கில இலக்கியம் பயிலுதல் (மும்பை)

1952  -  1953  மெய்யியல் கற்றல் (பூனே)

1953  -  1955  மெய்யியல் படிப்பு தொடர்ச்சி (கொடைக்கானல்)

1955  -  1957  ஆசிரியர் & விடுதிக் காப்பாளர்
புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி, மதுரை.

1957  - 1961  இறையியல் படிப்பு (பூனே)

24.03.1960  குருப்பட்டம் (பூனே)

1961  -  1962  புனித சவேரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட். கற்றல். (பாளை)

1962  -  1963  இயேசு சபையில் இறுதிப் பயிற்சி (கொடைக்கானல்)

1963  -  1966  ஆசிரியர், திருச்சி புனித வளனார் உயர்நிலைப் பள்ளி,
கத்தோலிக்க விடுதிகளின் பொதுக் கண்காணிப்பாளர்,
கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1966  -  1969  தலைமையாசிரியர், புனித அருளானந்தர் உயர்நிலைப் பள்ளி, ஓரியூர்.

1969  -  1972  தலைமையாசிரியர் & இல்லத் தலைவர்,
கார்மல் உயர்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.

1972  -  1975  துணை முதல்வர், புனித வளனார் கல்லூரி, திருச்சி;
கல்லூரி விடுதிக் கண்காணிப்பாளர்; கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1975  -  1976  துணை முதல்வர், புனித அருளானந்தர் கல்லூரி, கருமாத்தூர். கல்லூரி விடுதிக் கண்காணிப்பாளர்; கல்லூரி விளையாட்டுக் கழகத் தலைவர்.

1976  -  1980  ஆசிரியர் & விடுதிக் கண்காணிப்பாளர், புனித மரியன்னை உயர்நிலை பள்ளி, மதுரை.

1980  -  1981  தலைவர், லொயோலா தொழிற்பயிற்சிப் பள்ளி, மதுரை.

1981  -  1984  முதல் தலைமையாசிரியர், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி, கொசவபட்டி.

1984 மே - ஆசிரியர் பணி ஓய்வு

1984  -  1997  வெளியீட்டு மேலாளர், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

1997  -  2000  நிதிப் பொறுப்பாளர், புனித வளனார் கல்லூரி, திருச்சி.

2000  -  2001  இளைப்பாறுதல்

2001  -  2006  விடுதிக் கண்காணிப்பாளர், லொயோலா தொழிற்பயிற்சிப் பள்ளி, மதுரை.

2006  -  2009  உதவி மேற்பார்வையாளர், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

2009 முதல் - விடுதிப் பணியாளர், புனித ஜோசப் கருணை இல்லம், மெட்டூர் கேட்.
* * *

Monday, 14 January 2013

அகமதிப்பீட்டுத் தேர்வு (2012-2013)

கட்டுரைகளுக்கான தலைப்புகள்:

  1. டிசம்பர்-21, 2012-ல் ஏன் உலகம் அழியவில்லை?
  2. ஏதேனும் ஒரு நூல் ஒன்றினை மதிப்பீடு செய்க.
  3. சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இயற்கை மாற்றங்களும்.
  4. சமூகக் கருத்தோடு கூடிய உரையாடல்.
  5. உன் எதிர்கால இலட்சியம்.
  6. உன் மனங்கவர்ந்த அறிவியல் அறிஞர்.
  7. இன்றைய சூழலில் நீ முதலமைச்சரானால் என்னென்ன மாற்றங்கள் செய்வாய்?
  8. உன் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்.
  9. ‘விஸ்வரூபம்’ திரைப்படத் தொழில் நுட்பமும், வர்த்தகப் போராட்டங்களும்.
  10. நீ மாதிரியாக(Role Modelஆக) கருதும் ஒரு நபருடன் நேர் காணல். 
 குறிப்புகள்:
1.       A4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல்,ஏதேனும் ஐந்தினுக்கு மட்டும் எழுதுக.
2.       பயனுள்ள தொடுப்புகள் சில:

Monday, 12 November 2012

'தீப ஒளி' பரவட்டும்!


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

உண்மையான மகிழ்ச்சி என்பது விழாக்களை நாம் பாதுகாப்பாகக் கொண்டாடுவதில்தான் இருக்கிறது. பாதுகாப்பு என்பது நமக்கு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ளவருக்கும், சுற்றியுள்ளவைகளுக்கும்தான். இதைத்தான் ரஞ்சித் எழுதிய உயிரின்வலி சிறுகதை நமக்குச் சொல்கிறது.

வெடிகளைப் பொருத்தவரை தயாரித்து கடைகளில் கொலு ஏறும்வரை ஒருநிலை. அதை உயிர்மையில் வந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரை காட்டுகிறது. அதை நாம் வாங்கி கொளுத்திய பின்புள்ள அடுத்த நிலையைக் கீற்றில் வந்த கட்டுரை விளக்குகிறது.

இம்மாணவப் பருவத்தில் இவ்விரண்டையும் அறிந்துகொள்வது மட்டுமின்றி, உங்களின் நட்புக்குரியவர்களுக்கும் இதைக் கூறுங்கள். மேலும், தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கூந்தன்குளம், கிட்டாம்பாளையம், வேட்டன்குடி ஆகிய கிராமங்களில் அதிகமான பறவைகள் வசிப்பதால் அங்குள்ளவர்கள் யாரும் வெடி வெடிப்பதில்லை. இதை அங்குள்ள சிறுவர்களே மகிழ்ச்சியாகக் கூறுகிறார்கள்.

தீப ஒளி உங்கள் உள்ளங்களிலிருந்து இல்லங்களில் பரவட்டும்.