Friday, 29 June 2012

காந்தி சொன்ன பாவங்கள்!


ஒவ்வொரு சமயமும் பாவங்கள் எவை எவை என்று வரையறுத்துச் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நம் மகாத்மா காந்தி அவர்கள் வரிசைப்படுத்தும் ஏழு பாவங்களைப் பாருங்கள்.
1.கொள்கை இல்லா அரசியல்
2.உழைப்பு இல்லா செல்வம்
3.நன்னெறி இல்லாத வியாபாரம்
4.குணமற்ற கல்வி
5.மனிதத் தன்மையற்ற விஞ்ஞானம்
6.மனசாட்சியற்ற இன்பம்
7.தியாகமில்லாத வழிபாடு

Thursday, 7 June 2012

கலாம் பேச்சு!


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும், என்.எல்.சி., நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சமீபத்தில் பார்வையிட்டார். அங்குள்ள  இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கலாம் அவர்கள் பேசியதிலிருந்து சில வரிகள் :

என்.எல்.சி., நிறுவனத்தை முதன் முறையாகப் பார்வையிடுகிறேன். நம் நாட்டின் பலமாகத்  திகழும், மிகவும் சக்தி வாய்ந்த என்.எல்.சி., நிறுவனத்தில், தற்போது, 2,740 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.

நெய்வேலியில், 18 லட்சம் மரங்கள் இருப்பது, ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. சுத்தமான, பசுமையான நகரம், நெய்வேலி. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது. உலகில், மூன்று முறை பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

உலகில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டது. எப்போதும் பிரச்னைகள் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. பிரச்னைகளுக்கு நாம் தலைமை தாங்கி, அதை விரட்ட வேண்டும். 

நம் நாடு, 2020ம் ஆண்டில் வல்லரசாகும். நதிகள் இணைக்கப்படும் போது, மாநிலங்களுக்குள் பிரச்னைகள் வராது. இந்தியாவில் உள்ள 600 மில்லியன் இளைஞர்கள் தான், நம் நாட்டின் மிகப் பெரிய பலமாகத் திகழ்கின்றனர்.

வீடுகள் தோறும், சிறு நூலகம் இருக்க வேண்டும். "டிவி' பார்ப்பதை தவிர்த்து, நல்ல புத்தகங்களை படிக்கும் போது, அறிவு வளர்ச்சி மேலோங்கும். குறைந்தபட்சம் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்காவது, பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது புத்தகங்களைப் படித்த, கதிரேசன் என்ற எனது கார் ஓட்டுனர், பேராசிரியாராகி விட்டார். எனவே நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். தோல்விகளைத்தோல்வியடைய செய்ய வேண்டும். தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு. 

ஊழலை ஒழித்தால் நம் நாடு வல்லரசாகும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிள்ளைகள் தங்களது அப்பா அல்லது அம்மா லஞ்சம் வாங்கினால், அவர்களை கடுமையாக திட்டி கண்டிக்க வேண்டும். பெற்ற பிள்ளைகள் கண்டிப்பதை விட, அந்த பெற்றோருக்கு வேறு அவமானம் இருக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் பட்சத்தில், நம் நாட்டில் மிக விரைவில் லஞ்ச, ஊழல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.


Saturday, 2 June 2012

நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் இலவசம்!


வணக்கம் ஐயா வாசகர்களே,
உங்களுக்கு ஓர் இணையதள அறிமுகம்.

தமிழ் விர்சுவல் யுனிவர்சிட்டி என்றொரு இணையதளம் உள்ளது. இதில் வலப்புறம் நூலகம் என்ற தொடர்பில் உள்ளே சென்றால் நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம் . 

கி.வா.ஜ  அவர்களை க்ளிக் செய்து " கவி பாடலாம் " என்ற நூலை தரவிறக்கிப் படித்தேன். மிகமிக அருமை. எதுகை மோனை உங்களுக்கு சுவாரசியம் தராமல் கூடப்போகலாம். பாவினங்களை அவர் விளக்கும் விதம் அட்டகாசமாக இருந்தது.
நீங்களும் விரும்பிய நூலைத் தரவிறக்கிப் படித்துப் பயன் பெறுங்கள்.

நன்றி. 
அன்புடன்,
மா.சட்டநாதன்
http://tamilvu.org/

நன்றி: சட்டநாதன் மெயில் 

Tuesday, 29 May 2012

புத்தகத் திருவிழா!


              கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தினுள் உள்ள காந்தி மண்டபத்தில் 28 வது தேசிய புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இது ஜூன் 8 ஆம் தேதி வரை இருக்கும்.
             திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இதை அமைத்துள்ளது.அன்னம்,ஆழி,உயிர்மை,காலச்சுவடு,கிழக்கு,கொற்றவை,சந்தியா,பாவை,பாரதி,புதுமைப்பித்தன்,கண்ணதாசன்,தாமரை,விஜயா,பிளாக் ஹோல் போன்ற பதிப்பகங்கள்  மற்றும் விகடன் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம்,... என்று நீங்கள் எதிர் பார்க்கும் எல்லாப் பிரிவுகளும் இருக்கின்றன. கல்கியும் காரல்மார்க்சும் கிடைக்கிறார்கள். தற்கால எழுத்தாளர்களின் புத்தகங்களும், குழந்தைகளுக்கான புத்தகங்களும் அதிகமாக உள்ளன.
            சி.ஜெயபாரதன் எழுதிய அணுசக்தி, நடன.காசிநாதன் எழுதிய தமிழர் காசு இயல், மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதிய தமிழர் வளர்த்த அழகு கலைகள், கி.ரா. எழுதிய தாத்தா சொன்ன கதைகள், பேல பெலாஸ் எழுதிய சினிமாக் கோட்பாடு, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய காற்றில் யாரோ நடக்கிறார்கள், உலக சினிமா, தியோடர் பாஸ்கரன் எழுதிய நம்மைச் சுற்றி காட்டுயிர், ஜெயமோகன் எழுதிய சிலுவையின் பெயரால், சுஜாதா எழுதிய திருக்குறள் புதிய உரை போன்ற பல நூல்களை நான் வாங்கினேன். 10% முதல் 30% வரை தள்ளுபடி தருகிறார்கள்.
             எத்தனையோ முறை கோவில்பட்டி போறோம் வாரோம். அப்படி என்னதான் இருக்குன்னு ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் வாங்களேன்.

Thursday, 26 April 2012

வீட்டுக்கு வெளியே வாங்க!

           நம் பள்ளியில் 12 -ம் வகுப்பு(2010 -2011 இல்) படித்து விட்டு தூத்துக்குடியில் பி.எஸ்சி படித்து வரும் அருள் ஜேசுராஜ், தூத்துக்குடியில் உள்ள ஒரு இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறான். படிக்கும் போதே பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமுடைய அவன், இருபதுக்கும் மேற்பட்ட இருபால் இளையோரும் உள்ள இவ்வியக்கத்தின் பணிகளாக நம்மிடம் கூறியன:
             எங்களுடைய படிப்பு நேரம் போக விடுமுறைநாட்களில் எங்கள் பணிகளைச் செய்கிறோம். சமூக விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளை (கரகம்,களியல்,சிலா,பறை,ஒயில்,ஒத்தக்கம்பு போன்ற நடனங்கள் மூலமும்,பட்டிமன்றம்  மூலமும்), பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகிறோம்.  எங்களின் கலைநிகழ்ச்சிகளை அருகிலுள்ள கோவில் திருவிழாக்களுக்கு விரும்பி அழைக்கிறார்கள். 
                        அண்மையில், நியுக்ளியர் அணுவால் ஏற்படும் தீமைகளைக் குறித்து வீதி நாடகங்கள் நடத்தி இருக்கிறோம் .கூடங்குளம் சென்று அங்கு போராடும் மக்களையும், உதயகுமாரையும் சந்தித்து வந்திருக்கிறோம். 
                       தெருவோரக் குழந்தைகள், பிச்சைஎடுக்கும் குழந்தைகள் போன்றோரைக் கண்டுபிடித்து தூத்துக்குடி ஆயரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பல்நோக்கு சமூகசேவை சங்கத்திற்கு தெரியப்படுத்துகிறோம். அரசு உதவி பெரும் அச்சங்கம் அக்குழந்தைகளுக்குத் தேவையான உதவி செய்கிறது. இதே போல கொலை,கொள்ளையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அவ்வீட்டிலுள்ள குழந்தைகளையும் இச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
              ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகலில் வீடுகள் சந்தித்து செபித்தல், மாதமிருமுறை அரசு மருத்துவமனையில் ஆதரவற்று இருக்கும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல். தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லம், மாற்றுத் திறனாளிகள் இல்லம், குழந்தைக் குற்றவாளிகள் போன்றோரைச் சந்தித்து நம்பிக்கையூட்டுதல் போன்ற பணிகளையும் செய்கிறோம்
                                      இப்பணிகளுக்கு மத்தியிலும்  தன் படிப்பில் முதலாம் ஆண்டில்
86 % சதவீத மதிப்பெண் வைத்துள்ளான் அருள். 
              இன்றைய இளைஞர்களில் அதிகம் பேர் விடுமுறை நாட்களில், பத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் உள்ள பேன்ட் அணிகிறார்கள். அதில் காரணம் தெரியாது பல கயிறுகள் தொங்க, எண்ணெய் தேய்க்காத காஞ்சிபோன அவர்களின் தலைக்குப் பின், தொங்கும் குல்லாஉடனான 
டி-சர்ட் அணிந்து கொண்டு, கழுத்தில் கையில் கண்டபடி ஸ்டீல் செயின், டாலர் சகிதமாக நண்பர்களுடன் ஊர்சுற்றுவது, பார்ட்டி என்ற பேரில் மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, அரட்டையடிப்பது; இன்னும் சிலர், உண்பது, உறங்குவது, டிவி பார்ப்பது என்ற கொள்கைப்பிடிப்போடு இருப்பவர்களும் உண்டு. யாரோடும் ஒட்டாத பயங்கரப் படிப்பாளிகள். சிலர் டியூசன் போவதாகக் கூறி  இல்லாத வம்பை வீட்டுக்கு இழுத்து வருவார்கள். பேஸ் புக்கில் புதைந்து கிடப்பது. வேறு சிலரோ, அகப்பட்ட பெண்களையெல்லாம் தோழி என்ற பெயரில், காதோடு ஒட்டவைத்த "செல்"லும் கையுமாகத் திரிவார்கள். இதுதான் இன்றைய இளையோரைப் பாழ்படுத்தும் வாடிக்கைகள்!
            இவர்களுக்கு  மத்தியில் அருள் மற்றும் குழுவினரின் செயல்பாடு நமக்கு மகிழ்ச்சி  தருவதாக உள்ளது. இவ்வாறு ஒரு புதிய இளைய தலைமுறையை உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ள அருட்தந்தை கிராசிஸ் மைக்கேல் அவர்கள், இளைஞர் பணியகத்தின் இயக்குனராகப் பொறுப்பு வகிப்பது மட்டுமின்றி, உண்மையிலேயே பணியாற்றி வருவது சிறப்பு!
             இளைஞர் இயக்கம் நடத்துபவர்களுக்கு, இவர்களைத் தெரிந்த பின்பாவது புத்தி வரட்டும்!

Saturday, 21 April 2012

சொல் புதிது! - புதிய தளம்



அன்பு மாணவச்  செல்வங்களே,
சமூகம் மற்றும் பொதுவாக எழுதப்படும் நீள் கட்டுரைகளை, குறுங்கவிதைகளை 
என்ற புதிய தளத்தில் காண உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

Saturday, 3 March 2012

தேர்வுக்கு முன் தண்ணீர் குடிங்க!


நன்றாகப் படிக்க வேண்டும், படித்தவை நினைவில் இருக்க வேண்டும், நினைவில் இருப்பதைஎழுத பேனா வேண்டும், பேப்பர் வேண்டும்.. என்றெல்லாம் யோசிக்கிறீர்களா ? கொஞ்சம் தண்ணீர்குடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயமாய் இருக்கிறதே என நினைக்கிறீர்களா ?
வியப்பூட்டும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் தற்போது சிறந்த ஒரு ஆராய்ச்சியாய் கொண்டாடப்படுகிறது.
தேர்வுக்குச் செல்வதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன் 250 மிலி தண்ணீரை அருந்துவது தேர்வை சிறப்பாக எழுத உதவுகிறது எனும் இந்த ஆராய்ச்சி முடிவு இலண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
 இந்தப் பலனுக்கான சரியான காரணம் இன்னும் புரியாத நிலையில், தண்ணீர் அருந்துவது நிச்சயமாக நன்றாகவும், கவனமாகவும், எளிதாகவும் தேர்வு எழுத உதவுகிறது என்பது மட்டும் இந்த விரிவான ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.
 மூளையில் தகவல் பரிமாற்றம் தண்ணீர் குடித்தபின் எளிதாக இருக்கும் என்பது இதன் காரணமாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த சோதனை பல்வேறு வடிவங்களில் நடத்தப்பட்டது. உதாரணமாக தண்ணீர் குடித்த மற்றும் குடிக்காத மாணவர்கள் எப்படி தேர்வில் கவனமாய் செயல்படுகின்றனர், அவர்களுடைய கண்பார்வை கூர்மையில், சிந்தனையில், செயல்படுதலில் ஏதேனும் வேறுபாடு தெரிகிறதா என்றெல்லாம் பல்வேறு வகைகளில் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டது.
இருபடங்களுக்கிடையேயான வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று போட்டி வைத்த போது தண்ணீர் குடித்திருந்த மாணவர்கள் மற்றவர்களை விட 34 விழுக்காடு அதிக சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர்.
 இரண்டும் இரண்டும் எத்தனை என்பது போன்ற எளிய கணக்குப் போட்டிகளில் ஏதும் குறிப்பிடத் தகுந்த வேறுபாடு காணப்படவில்லை, ஆனால் கடினமான நினைவுப் போட்டிகளில் தண்ணீர் குடித்த மாணவர்களே 23 விழுக்காடு அதிகம் சிறப்புடன் செயல்பட்டிருக்கின்றனர்.
தண்ணீர் குடிப்பது பல்வேறு விதங்களில் பயனளிக்கிறது என்பதை இந்த ஆராய்ச்சி இன்னுமொருமுறை தெளிவு படுத்தியிருக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் கெரோலில் எட்மண்ட்ஸ்.
 தண்ணீர் அருந்துவது பெரியவர்களுடைய அறிவுத் திறமையை அதிகரிக்கும் என முன்பு ஒரு ஆராய்ச்சி வெளிவந்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
 எனினும், தேர்வுக்கும் தண்ணீர் அருந்துவதற்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியிருக்கும் முதல் ஆராய்ச்சி இது எனும் வகையில் இந்த ஆராய்ச்சி சிறப்பிடம் பெறுகிறது.
நன்றி : சாளரம்