Sunday 22 January 2012

நாமும் மருத்துவமும்!

              ட்டநாதன், தேவிபாலா, கணேஷ்குமார் மூவரும் உடன்பிறப்புகள், நம் பள்ளியின் பழைய மாணவர்கள். கடந்த 11 தேதி இவர்களின் தாயார் உடல் நலமின்றி இறந்து விட்டார் . வயது 45. கேட்டவுடன் அதிர்ச்சியாய் இருந்தது. நீண்ட நாட்களாய் சுகவீனமாய் இருந்தார் என்று ஒன்றும் இல்லை. தீபாவளி சமயத்தில் வைரஸ் காய்ச்சல் இருந்திருக்கிறது. தற்போது இரு நாட்கள் உடல்நலமின்மை. அதிக சுகர், குறைவான இரத்தம்,இரத்த அழுத்தம்  - இவை மருத்துவர்கள் சொல்லும் காரணங்கள். சிறுநீரகக் கோளாறா என்றும் பரிசோதித்து இருக்கிறார்கள். இதில் எது கூடினாலும் அது மயங்கி விழுதல், வயிற்றுவலி, சிறுநீர் செல்வதில்  பிரச்சனை போன்று ஏதேனும் இருந்திருக்கக் கூடும்.அப்படி ஒன்றும் இருந்ததில்லை என்கிறார் அவர்களின் அப்பா. நன்றாகப் பேசி இருந்தவர் திடீரென்று இறந்து விட்டார் என்பதை அவர்கள்  யாராலும்  நம்பமுடியவில்லை. அவர்களின் இறப்பு அவர்களுக்குப்   பேரிழப்பாக இருக்கிறது.  
               இன்றைய நாட்களில்  நான் பொதுவாகக் காண்பது,  பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின்  மேல் அக்கறையுள்ள அநேக தாய்மார்கள்,  தங்கள் உடல் நலத்தின் மீது சிறிதளவுகூட கவனம்  செலுத்துதில்லை. வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் வீட்டிலுள்ள மிச்சமீதியை உண்கிறார்கள்.அது  சத்தான உணவாகவும்  இருப்பதில்லை. இவற்றோடு மாசு கலந்த சுற்றுச்சுழல், பாதுகாப்பற்ற குடிநீர் இவற்றால் வரும் உபாதைகள்,  குடும்பப் பிரச்னை காரணமான   மன அழுத்தம்  போன்றவை  நாற்பது வயதைத் தாண்டும் போது ஒன்று சேர்கிறது. அந்தச் சுழலில் உடல் நலத்தை அவர்கள் பெரிதாக நினைப்பதில்லை. கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். நாற்பது வயதிற்கு மேல்  முழுமையான உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார் மருத்துவர். யார் அதை அப்போது யோசிக்கிறார்கள்?
              பெரியவர்கள் இப்படி இருக்க, இளைய வயதினரும் தன்னுடலைப் பேணுவதில் பொறுப்பற்று இருக்கிறார்கள். சான்றாக, ஓராண்டுக்கு முன்பு அன்புச்செல்வம் என்ற கழுகுமலையை சார்ந்த 27 வயது இளைஞர் டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை நோயை சரியாகக் கவனிக்காது இருந்ததால் யாரும் எதிர் பாராத மரணத்தை அடைந்தான். மருத்துவத்தின் முக்கியத்துவம் பட்டதாரி இளைஞரான அவருக்குத் தெரியாதா என்ன? 
              இது ஒரு புறமிருக்க, சில நேரம் நாம் மருத்துவரை அணுகும் நம் அணுகுமுறையும்கூட தவறாகி  விடுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கண் வலி ஏற்பட்டது. சாதாரண கண் வலி தானே என்று பொது மருத்துவரிடம் காண்பித்தேன். அடுத்த ஓரிரு நாளில் கண்ணைச் சுற்றி வீக்கம் அதிகமானது. அதன் பின் கண் மருத்துவரிடம் சென்றேன். அவர் திட்டினார். கண் வலி என்றால் கண் டாக்டரிடம் காட்ட வேண்டியது தானே, கண்ட டாக்டரிடமும் காட்டுவதா,  படிச்ச நீங்களே இப்படி இருக்கலாமா? என்றார்.அமைதியாகக்  கேட்டுக்கொண்டேன். கண் சரியாகவேண்டுமே! 
                இன்னொரு சமயம், என் மனைவிக்கு சிக்குன் குனியா காய்ச்சலுக்குப் பின் நீண்ட நாட்களாக இருந்த மூட்டு வலி குணமாகவில்லை. பலரும் எலும்பு சிறப்பு மருத்துவரிடம் காண்பியுங்கள் என்றனர். அதன் படி காட்ட, மூட்டு வலியும் போகவில்லை. கூடவே வயிறு புண்ணாகி அல்சர், தலை சுற்றல், மயக்கம்இவ்வளவும் புதிதாய் வந்தன. வேறு வழி தெரியாது, வழக்கமாகக் காட்டும் பொது மருத்துவரிடம் போய்காட்டினேன். அவரும் திட்டினார். சிறப்பு மருத்துவருக்கு என்ன பொது மருத்துவம் தெரியும்? அவருக்கு அறுக்கவும் தைக்கவும்தான் தெரியும் என்றவர்,   படிச்ச நீங்களே இப்படி இருக்கலாமா? என்றார். இப்போதும் அமைதியாகக் கேட்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. சில நேரம் இப்படியும் ஆகி விடுகிறது.
                 *   மொத்தத்தில், சரியான நேரத்தில் சரியான மருத்துவம் என்பது இன்று அவசியமாகி விட்டது.
                 *   குறிப்பிட்ட வயதிற்கு மேல் நோயே இல்லை என்று நீங்கள் நினைத்தாலும், ஒரு பொதுவான உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குறைந்த செலவில் பரிசோதிக்கும்  வாய்ப்பு அரசு மருத்துவமனைகளில்கூட  உள்ளது.      
                  *     ஒருமுறை பொது மருத்துவரிடம் காண்பித்த பின் சரிவராத போது, சிறப்பு மருத்துவரை அணுகத்தவறாதீர்கள்.                                                                                     
                  *   மருத்துவ ம் என்பதுகடைசி நேரத்தில் ஓடி ஓடிப் போய் பார்ப்பதல்ல.
                  *   நீங்கள்  உங்களுக்கு மட்டுமல்ல  ,உங்களைச் சார்ந்தவர்களுக்கும் முக்கியம் என்பதை உணருங்கள்.
                  *   இன்ப துன்ப, ஏற்ற இறக்கம் இயற்கையின் நீதி. அதை உடல் நலத்தோடு இருந்து தான் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, நோய்வாய்ப்பட்டு அல்ல.
               *   இவ்வரிய மானிடப் பிறவியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வது மற்றவர் கையில் அல்ல, உங்கள் கையிலேதான் உள்ளது.          

1 comment:

  1. என் பள்ளித் தோழனின் அம்மா நம்மை விட்டு மறைந்தது மிக கவலை அளிக்கிறது....

    இது போன்ற நோய் மற்றும் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு நம் ஊரில் மிக குறைவாக உள்ளதும் வருத்தம் தருகிறது.

    மக்களிடையே இதை சரி செய்ய ..ஒவ்வொரு நோய் பற்றிய மருத்துவ முகாம் , விழிப்புணர்வு பேரணி , என ஏதாவது செய்து கொண்டே இருத்தல் அவசியம்..

    ReplyDelete