Tuesday 27 December 2011

சபரிநாதனின் புதிய கவிதை - கதை?


          பத்தாம் வகுப்பு படிக்கும் போது "படைப்பாளி."  கல்லூரி நாட்களில் "இலைகளுக்கிடையே வானம்."  இப்போது  "களம் -காலம் -ஆட்டம்." சபரிநாதன் இயற்றிய மூன்று கவிதைகளின் தொகுப்புகள்  இவை.
        முதலாவது அனைவருக்கும் வியப்பைத் தந்தது. இரண்டாவது  பாராட்டைப் பெற்றாலும், சில கவிதைகள் புரியவில்லை என்ற விமர்சனதிற்கு உள்ளானது. மூன்றாவது தொகுப்பு கவிதைக்கான தளத்தில்  இருந்து கதைக்கான தளத்திற்கு நகர்ந்துள்ளது. க. நா. சு. முதல் இன்று கலாப்ரியா போன்றோர்  வரை அவர்களின் படைப்பில் பாடும் உத்தி மாறினாலும், கவிதை படிக்கிறோம் என்ற உணர்வு இருக்கும்.ஆனால்,சபரியின் மூன்றாவது தொகுப்பில் கவிதை நூல் என்பதில் மட்டுமே கவிதை இருப்பதாகப் படுகிறது.சபரிக்கு இது முக்கியமான காலகட்டம். பாதை மாறி பயணமா என்று தயங்க வேண்டாம்.  ஏனெனில் கவிதையை விட கதை நன்றாக வரும் எனத்  தெரிகிறது. இது வளர்ச்சியே அன்றித் தளர்ச்சி அல்ல.புதுமைபித்தன் கவிதைகளும் எழுதி இருக்கிறார்,சிறுகதைகளும் எழுதி இருக்கிறார்.இருப்பினும் சிறுகதைகளே அவருக்கு அடையாளம் காட்டியது. கண்ணதாசனும்  கவிதைகளும்,கதைகளும் எழுதினாலும் கவிதைகளே அவருக்கு நிலையான இடத்தைத் தந்தது.
          எனவே தனக்கு அடையாளம் காட்டுவதும்,  நிலையான இடத்தைத் தருவதுமான வடிவத்தை நோக்கி நகர்வது ஆரோக்கியமான பயணமே என்ற புரிதலுடன் சபரியின் படைப்பு தொடரட்டும்.


- வாழ்த்துக்களுடன் அசின் சார்!
   



1 comment:

  1. சபரியின் எழுதும் திறனுக்குத் தீணி போட்ட தங்களது உற்சாக பயணமும் தொடரட்டும்..இன்னும் பல சபரி நாதன்களை உருவாக்கிட.
    .வாழ்த்துக்கள் சார்...!!

    ReplyDelete